நத்தம் விஸ்வநாதன் வெற்றியை எதிர்த்து திமுக வழக்கு

by Editor / 17-08-2021 09:43:50am
நத்தம் விஸ்வநாதன் வெற்றியை எதிர்த்து திமுக வழக்கு

அதிமுக எம்எல்ஏ நத்தம் விஸ்வநாதன் வெற்றியை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில் திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. இதில் திமுகவின் உதய சூரிய சின்னம் 133 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. இந்த சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வெற்றிபெற்றார்.

அதிகம் எதிர்க்கப்பட்ட ஸ்டார் வேட்பாளர் தொகுதியான நத்தம் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலத்தை விட 11 ஆயிரத்து 932 வாக்குகள் அதிகம் பெற்று நத்தம் விஸ்வநாதன் வெற்றிபெற்றார்.

இந்த நிலையில் இவரின் வெற்றி முறைகேடானது, மக்களிடம் இவர் பணப்பட்டுவாடா செய்தார் என்று திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.

இதனால் இவரின் வெற்றியை ரத்து செய்துவிட்டு நத்தம் தொகுதியில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார்.

தேர்தல் பிரச்சார கால அவகாசம் முடிந்த பின்பும் பிரச்சாரம் செய்தார், வேட்புமனுவில் உண்மைகளை மறைத்தார், உச்ச வரம்பை தாண்டி கூடுதல் நிதியை தேர்தலுக்காக செலவு செய்தார், தேர்தல் நடத்தை விதிகளை மீறினார், தேர்தல் நேரத்தில் ஊழல் செய்தார் என்ற குற்றச்சாட்டுகளை நத்தம் விஸ்வநாதன் மீது ஆண்டி அம்பலம் அடுக்கி உள்ளார்.

இதனால் அவரின் வெற்றியை உடனடியாக ரத்து செய்து இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் வழக்கு தொடுத்துள்ளார்.

 

Tags :

Share via