சபரிமலை வரும் பக்தர்கள் மழைக்கோட்டு, குடை சகிதம் வருமாறு வேண்டுகோள்.
சபரிமலையில் கனமழை பெய்து வருகிறது.இருப்பினும் மழையில் நனைந்தபடியே பக்தர்கள் தரிசனத்துக்குச் சென்று வருகின்றனர். பாதிப்புகளை களைய தேசிய பேரிடர் மீட்பு படை சபரிமலையில் முகாமிட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த மாதம் 16-ம் தேதி முதல் மண்டல கால வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. தொடக்கத்தில் ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா பக்தர்களின் வருகை அதிகம் இருந்தது. கார்த்திகை 12-ம் தேதியை முன்னிட்டு சபரிமலையில் தீப அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கேரள பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று (நவ.30) மாலையில் நிலக்கல், பம்பை, சந்நிதானம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்யத் தொடங்கியது. இரவில் நீடித்த சாரல் இன்று பகலில் கனமழையாக மாறியது. இதனால் பக்தர்கள் பலரும் நனைந்தபடியே மரக்கூட்டம், நீலிமேலை, சரங்கொத்தி, அப்பாச்சிமேடு படிப்பாதை வழியே சந்நிதானத்துக்குச் சென்றனர்.
இந்நிலையில் புயலின் தாக்கத்தினால் டிச.4-ம் தேதி வரை பத்தினம்திட்டா உள்ளிட்ட கேரளாவின் பல மாவட்டங்களிலும் கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக சபரிமலை பகுதிகளில் 2 செமீ.வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிக்கை சபரிமலை தேவஸ்தானம் போர்டுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மழைநிலவரத்துக்கு ஏற்ப பக்தர்கள் தங்கள் பயணங்களை அமைத்துக் கொள்ளும்படி தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
மேலும் பம்பை ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பக்தர்கள் பாதுகாப்பாக குளிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இங்கு முகாமிட்டுள்ளனர்.
மழை தொடர்ந்து பெய்வதால் தரிசனம் முடித்து சந்திரநாதன் சாலை, சுவாமி ஐயப்பன் சாலை வழியே மலை இறங்கும் பக்தர்களுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் கூறுகையில், “அசாதாரண சூழ்நிலையை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படை பம்பையிலும், சன்னிதானத்திலும் முகாமிட்டுள்ளது. மரம் சரிந்தால் அவற்றை அகற்றுவதற்கான கருவிகள்,செயற்கைகோள் தொலைபேசிகள், எட்டு ரப்பர் படகுகள், கூடுதல் ஸ்ட்ரெச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.” என்றார்.
Tags : சபரிமலை வரும் பக்தர்கள் மழைக்கோட்டு, குடை சகிதம் வருமாறு வேண்டுகோள்.