200 வெல்வோம் என்ற மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு, நான் விடும் எச்சரிக்கை -தவெக தலைவர் விஜய்
சென்னையில் நடைபெற்ற ‘எல்லோருக்குமான அம்பேத்கர்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் நடிகரும் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டார். மக்கள் உணர்வுகளை மதிக்கத்தெரியாத, பாதுகாப்பை உறுதி செய்ய இயலாத, கூட்டணி கணக்குகளை நம்பி, 200 வெல்வோம் என்ற மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு, நான் விடும் எச்சரிக்கை, நீங்கள் உங்கள் சுயநலத்திற்காக கூட்டணியாக பாதுகாத்துவரும் ஆட்சி அனைத்தும் 2026-ல் மக்களே Minus ஆக்கிவிடுவார்கள்என்று திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்து பேசினார்.
இந்தியாவின் முதல் சட்டத்துறை அமைச்சரும், இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியவருமான அண்ணல் அம்பேத்கர் குறித்த தகவல்கள் இடம்பெற்ற ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தகத்தின் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் விகடன் குழும நிர்வாகிகள், விசிக துணைப் பொதுச் செயலாளரும், நூலை உருவாக்கியவருமான ஆதவ் அர்ஜுனா, அம்பேத்கரின் பேரனான ஆனந்த் டெல்டுண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் பேசிய தவெக தலைவர் விஜய்,
“அண்ணல் அம்பேத்கருடைய நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டது வரமாக கருதுகிறேன். விழா மேடையில் அமர்ந்துள்ள அனைவருக்கும், நெஞ்சில் குடியிருக்கும் என் நண்பா, நண்பிகள், தோழா, தோழிகள் அனைவருடனும் நான் இருப்பது பெருமையாக உள்ளது. 100 ஆண்டுகள் முன்பே கொளம்பியா சென்று சாதித்த அசாத்திய மனிதர் அம்பேத்கர். அன்று அவரை சாதியை கூறி அவர் சமூகம் அவரை தடுத்தது. அதையும் மீறி அவர் பள்ளி சென்றால் அவரை தடுக்க நிறைய சக்திகள் இருந்தன. ஆனால் வைராக்கியத்தால் அவர் படித்து பிற்காலத்தில் ஒரு தலை சிறந்த தலைவராக அவர் உருமாற காரணமாக இருந்தது.
வன்மத்தை மட்டுமே காட்டிய சமூகத்திற்கு எதிராக அவர் செய்த செயல் மெய்சிலிர்க்க வைத்தது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என நாட்டில் இருக்கும் அனைவருக்கும் பெருமை சேர்த்தவர். ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தகத்தில் Waiting for a Visa என்ற தலைப்பில் ஒரு கட்டுரை இருந்தது. ஜனநாயகத்தின் ஆணிவேர் ‘Free and fair election’. சுதந்திரமாக தான் தேர்தல் நடக்கிறது என்ற நம்பிக்கை மக்களிடையே இருக்க வேண்டும். ஏப். 14- அம்பேத்கர் பிறந்தநாள். அன்றைய தினத்தை இந்திய ஜனநாயக தினமாக அறிவிக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள். அதை மத்திய அரசிடம் முன்வைக்கிறேன்.
இன்றும் மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பது தெரியும். அதை கண்டுகொள்ளாமல் அரசு நம்மை ஆண்டுகொண்டிருக்கிறது. மத்தியில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் இவ்வளவு ஆண்டுகள் தாண்டி ஒரு துரும்பும் கிள்ளிப்போடவில்லை. பிரச்னைகளுக்கு நாம் குரல் கொடுக்கவேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக எவ்வளவு பிரச்னை. தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான பாதுகாப்பை, மக்களை உண்மையாக நேசிக்கும் ஒரு நல்ல அரசு உருவாக வேண்டும்.
இது அமைந்தாலே போதும். அதனால், இங்கு தினம் நடக்கும் பிரச்னைகளுக்கு சம்பிரதாயத்திற்காக அறிக்கை விடுவது, மழை நீரில் நின்று புகைப்படம் எடுப்பது இதில் எனக்கு உடன்பாடு இல்லை. என்னை குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொண்ட அனைவரின் உணர்வுப்பூர்வமாக இருப்பேன். மக்கள் உணர்வுகளை மதிக்கத்தெரியாத, பாதுகாப்பை உறுதி செய்ய இயலாத, கூட்டணி கணக்குகளை நம்பி, 200 வெல்வோம் என்ற மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு, நான் விடும் எச்சரிக்கை, நீங்கள் உங்கள் சுயநலத்திற்காக கூட்டணியாக பாதுகாத்துவரும் ஆட்சி அனைத்தும் 2026-ல் மக்களே Minus ஆக்கிவிடுவார்கள்.
இந்த வாய்ப்பை கொடுத்த அனைவருக்கும் வணக்கங்கள். விசிக தலைவர் திருமாவளவன் இன்று வரமுடியாமல் போனது. அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள முடியாத அளவிற்கு எவ்வளவு Pressure இருக்கும் என்பது புரிகிறது. அவரது மனம் முழுக்க நம்முடம் தான் இருக்கும்”
இவ்வாறு பேசினார்.
Tags : 200 வெல்வோம் என்ற மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு, நான் விடும் எச்சரிக்கை -தவெக தலைவர் விஜய்



















