தூத்துக்குடி அருகே அகரம் பஞ்சாயத்து தலைவர் வெட்டி கொலை
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம், அகரம் ஊராட்சியில் தலைவராக இருந்து வந்தவர் ஈசாக்கு மகன் பொன்சீலன்(37). அதிமுக பிரமுகரான இவர், தற்போது நடந்து வரும் சி.எஸ்.ஐ தூத்துக்குடி – நாசரேத் திருமண்ட தேர்தலில் போட்டியிட்டு பெருமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் அகரம் ஊரில் கோவில் கொடைவிழா நடந்தது. கோவில் கொடைவிழாவிற்கு சென்ற பஞ்சாயத்து தலைவர் பொன்சீலன், பஞ்சாயத்து துணைத் தலைவர் தவசிக்கனி வீட்டிற்கு சென்றார். அங்கு அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அந்த வீட்டிற்குள் நுழைந்த 4 பேர் கொண்ட கும்பல் பொன்சீலனை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது. இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் பொன்சீலன் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக அதே ஊரைச் சேர்ந்த ஜெயசீலன் மகன் ஜெபசிங்(38), பொன்ராஜ் மகன் ரூபன்(48), பொன்ராஜ் மகன் ஜெகன்(42) மற்றும் ஜெபஸ்டின் ஆகியோர் சேர்ந்து கொலை செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
2017 ம் ஆண்டு அதே ஊரை சேர்ந்த லெனின் என்பவர் கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் பொன்சீலன் உள்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனால் பொன்சீலன் ஆதரவாளர்களுக்கும், லெனின் ஆதரவாளர்களுக்கும் இடையே பகை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. லெனின் கொலை சம்பவத்திற்கு பிறகு லெனினின் மனைவி பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பொன்சீலன் வெற்றி பெற்று அகரம் பஞ்சாயத்து தலைவரானார்.
தற்போது தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல தேர்தலில் போட்டியிட்ட பொன்சீலன் அதிலும் வெற்றி பெற்று பெருமன்ற உறுப்பினரானார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜெபஸ்டின் தோல்வியடைந்தார். தற்போது பொன்சீலன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திருமண்டல தேர்தலில் தோல்வியடைந்த ஜெபஸ்டின் பெயரும் இருக்கிறது. இவர் ஏற்கனவே கொலை செய்யப்பட்ட லெனினின் உறவினர் ஆவார்.கடந்த பல ஆண்டுகளாக அகரம் பகுதியில் இரண்டு கோஷ்டிகள் செயல்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் காசிநாடார் என்பவரின் கீழ் தொழில் செய்து வந்தவர்கள்தான் இவர்கள் அனைவரும். காசி நாடார் மகன் மோகன் கொலை செய்யப்பட்ட பிறகு, லெனினும், பொசீலனும் தனித் தனி கோஷ்டியாக பிரிந்தார்கள். 2017 ம் ஆண்டு கோஷ்டி பூசலில் லெனின் கொலை செய்யப்பட்டார்.
அதன் பிறகு சிறிது காலம் ஊரைவிட்டு வெளியேறிய பொன்சீலன், சமீபகாலமாகத்தான் சொந்த ஊரான அகரத்திற்கு வந்தாராம். அதன் பிறகு பஞ்சாயத்து தலைவர், சி.எஸ்.ஐ கிறிஸ்டின், அதிமுக பிரமுகர் என வலம் வந்தார்.இந்தநிலையில் லெனின் உறவினரான ஜெபஸ்டினை திருமண்டல தேர்தலில் தோற்கடித்தார். லெனின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களால் பொன்சீலன் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
Tags :