தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வை எழுத பெண்களுக்கு அனுமதி- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

by Admin / 19-08-2021 02:13:53pm
தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வை எழுத பெண்களுக்கு அனுமதி- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வை பெண்கள் எழுதுவதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்திருப்பதுடன், இது தொடர்பான அறிவிக்கையை வெளியிட யு.பி.எஸ்.சி.க்கும் உத்தரவிட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு அகாடமி (என்.டி.ஏ.) தேர்வை எழுத பெண்களை அனுமதிப்பது தொடர்பாக வக்கீல் குஷ் கல்ரா தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எஸ்.கே.கவுல், ரிஷிகேய் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் பிரதீப் சர்மா ஆஜராகி, என்.டி.ஏ. தேர்வு விவகாரம் அரசின் கொள்கை முடிவு சார்ந்தது, இதில் கோர்ட்டு தலையிட முடியாது என மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என வாதிட்டார்.
 
அப்போது நீதிபதிகள், மத்திய அரசின் நிலைப்பாடு பொருத்தமற்றது. கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தால்தான் ராணுவம் செயல்படுத்துமா? அப்படியென்றால் உத்தரவை பிறப்பிக்கிறோம். இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு தொடங்கி இந்த கோர்ட்டில் உத்தரவு பிறப்பிக்கும் வரை ராணுவம் தானாக செயலாற்றுவதில் நம்பிக்கை கொள்ளவில்லை. ராணுவத்தில் பெண்களுக்கு உயர் பதவிகள் அளிப்பது சுப்ரீம் கோர்ட்டு பிறப்பிக்கும்வரை தள்ளிப்போடப்பட்டது என தெரிவித்தனர்.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு பிறகு ராணுவம், கடற்படையில் பெண்களுக்கு உயர்பதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தேசிய பாதுகாப்பு அகாடமியை போல, இந்திய மிலிட்டரி அகாடமி, ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாடமி போன்றவற்றின் வாயிலாகவும் பெண்கள் ராணுவத்தில் சேரலாம். தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர பெண்களை அனுமதிப்பதில்லை என்பது அரசின் கொள்கை முடிவு என வாதிட்டார்.

அதற்கு நீதிபதிகள், தேசிய பாதுகாப்பு அகாடமி வாயிலாக ஏன் பெண்கள் ராணுவத்தில் சேரக்கூடாது? இரு பாலரும் சேர்ந்து படிப்பதில் பிரச்சினையா? மத்திய அரசின் கொள்கை முடிவு பாலின வேறுபாட்டை அடிப்படையாக கொண்டுள்ளது. செப்டம்பர் 5-ந்தேதி நடைபெறவுள்ள தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வை எழுத தகுதிவாய்ந்த பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக உரிய அறிவிக்கையை யு.பி.எஸ்.சி. வெளியிட வேண்டும். தேர்வு முடிவுகள் இந்த கோர்ட்டின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்படும் என்று உத்தரவிட்டனர்.

 

 

Tags :

Share via