வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

by Editor / 26-08-2024 12:10:19am
வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

ஒகேனக்கல்லுக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில்  பரிசல் பயணம் செய்து  அருவிகளில் குளித்தும் மகிழ்ந்தனா்.தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் கடந்த இரண்டு மாதங்களாக,நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் குளிப்பதற்கும் பரிசல் இயக்குவதற்கும் தடை நீடிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரம் நீர்வரத்து குறைந்ததால் மாவட்ட நிர்வாகம் பரிசளி இயக்கவும் குளிப்பதற்கும் அனுமதி வழங்கியது. இன்று வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை காலை முதலே அதிகரித்தன. மீன் விற்பனை நிலையம், பேருந்து நிலையம், பரிசல் துறை, முதலைகள் மறுவாழ்வு மையம், வண்ண மீன்கள் காட்சியகம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்ட நெரிசல் அதிகரித்தது. கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில்  நீா்வரத்து விநாடிக்கு 6,000 கன அடியாக உள்ளது.  சுற்றுலாப் பயணிகள் பிரதான அருவி, சினிஅருவி, காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனா்.

காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்காக மாமரத்துக்கடவு பரிசல் துறை பகுதியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து தொம்பச்சிக்கல் வழியாக மெயின் அருவி ஐந்தருவி, மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு உற்சாக பரிசல் பயணம் மேற்கொண்டனா்.

அருவிகள், நடைபாதைகளில் மக்கள் கூட்டம் நிரம்பியிருந்தது. சுற்றுலாப் பயணிகள் எண்ணை மசாஜ் செய்து, மீன் குழம்புடன் உணவு உண்டு மகிழ்ந்தனர். சுற்றுலாப் பயணிகளின் வருகையால் மீன் விற்பனை நிலையங்களில் மீன்களின் விலை சற்றே அதிகரித்தன.

ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் காவல் நிலையம், சத்திரம், முதலைப் பண்ணை, பேருந்து நிலைய வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளிலும் சாலை ஓரங்களிலும் நிறுத்தப்பட்டன. மேலும், பிரதான அருவி, நடைபாதை, மீன் விற்பனை நிலையம், முதலைகள் மறுவாழ்வு மையம், பேருந்து நிலையம், வண்ண மீன்கள் காட்சியகம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

 

Tags : ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

Share via