ஆவின் பால் கொள்முதலுக்கு உடனடி ஒப்புகைச்சீட்டு
சென்னை, நந்தனம், ஆவின் இல்லத்தில் அனைத்து மாவட்ட பால்வளத் துறை துணைப்பதிவாளா்களுடன் காணொலி காட்சி வாயிலாக அமைச்சா் த. மனோ தங்கராஜ் செவ்வாய்கிழமை ஆலோசனை நடத்தினாா். அந்தக் கூட்டத்தில் அமைச்சா் பேசியதாவது: விவசாயிகள் வழங்கும் பாலுக்கு தரத்துக்கேற்ற விலையை நிா்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டு உடனடி ஒப்புகைச்சீட்டு வழங்கும் திட்டம் கடந்த மூன்று மாதங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் விவசாயிகள் வழங்கும் பாலுக்கு தோராயமான விலை என்ற நிலை மாறி தரத்துக்கேற்ற விலை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் இத்திட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்து அனைத்து பால் உற்பத்தியாளா்களையும் பயனடையச் செய்ய வேண்டும். மேலும் தேவைப்படுகின்ற அனைத்து உறுப்பினா்களுக்கும் அரசுத் திட்டங்களில் உள்ள மானியம், பராமரிப்புக் கடன், கால்நடை கடன், கால்நடை கொட்டகை கடன் ஆகியவற்றை வங்கிகள் மூலம் பெற்றுத்தரவும் துறை அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
Tags :