சென்னையில் நடைபெற்ற என்.ஐ.ஏ. சோதனையில்  –ஒருவர் கைது!

by Editor / 28-01-2025 06:06:24pm
சென்னையில் நடைபெற்ற என்.ஐ.ஏ. சோதனையில்  –ஒருவர் கைது!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பிருப்பதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு (என்.ஐ.ஏ) ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழ்நாடு விரைந்தனர். தமிழ்நாடு வந்தடைந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலை முதலே அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சோதனை சென்னை உட்பட சுமார் 20 இடங்களில் நடைபெற்று வருகின்றன. அதன்படி, சென்னையில் புரசைவாக்கம் பகுதியிலுள்ள ஓர் அடுக்குமாடிக் கட்டடம் உள்பட மொத்தம் 5 இடங்களிலும், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியின் சுற்றுவட்டாரத்தில் உள்ள 15 இடங்களிலும் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த சோதனையில் எதிர்தரப்பினர் தனக்குத்தானே தாக்குதல் நடத்தி கொண்டு என்.ஐ.ஏ அதிகாரிகள் மீது பழி சுமத்தும் நிலை உண்டாக கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகாரிகள் தங்கள் உடையில் சிசிடிவி கேமராக்களை வைத்து கொண்டு சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.சென்னை புரசைவாக்கம் பகுதியில் உள்ள ஆம்புலன்ஸ் சேவைநிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் அங்கு பணியாற்றிவந்த அல்பாசிக் என்பவர் முன்னுக்கு பின்னாக என்.ஐ.ஏ அதிகாரிகள் கேள்விக்கு பதிலளித்துள்ளார். சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரை தீவிர விசாரணை செய்ததில், அவர் இளைஞர்களை மூளைச்சலவை செய்து ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பவர் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து என்ஐஏ அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 

 

Tags : சென்னையில் நடைபெற்ற என்.ஐ.ஏ. சோதனையில்  –ஒருவர் கைது!

Share via

More stories