செருப்பு கடையில் பயங்கர தீ விபத்து.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மெயின் சாலையில் ஏழாயிரம் பண்ணையை சேர்ந்த ஆபிரகாம் குடும்பத்தினர் செருப்பு கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். தரைத்தளம் மற்றும் மாடியில் இரண்டு தளங்கள் என கடைசெயல்பட்டு வருகிறது.
தரைத்தளத்தில் உள்ள கடையை ஆபிரகாம் மற்றும் அவரின் மகன் ஜோயல் இருவரும் பார்த்து வருகின்றனர். மாடியில் உள்ள முதல் தளத்தில் உள்ள கடையை ஆபிரகாம் மற்றொரு மகன் பிரபு பார்த்து வருகிறார். மாடியில் உள்ள இரண்டாவது தளத்தை கூடோனாக பயன்படுத்தி வருகின்றனர்
இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) இரவு மாடியில் உள்ள முதல் தளத்தில் திடீரென தீ பிடித்து பற்றி எரிந்துள்ளது. இதனைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து 2 தீயணைப்பு வண்டிகள் மூலமாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இருந்த போதிலும் முதல் தளத்தில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள காலணிகள், ஷூக்கள் முற்றிலுமாக எரிந்து சேதமானது. தீ பற்றி இருந்த காரணத்தினால் அதிக அளவில் புகை வெளியானது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் சம்பவ இடத்திற்கு வருகை சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை செய்கின்றனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Tags : செருப்பு கடையில் பயங்கர தீ விபத்து.