கும்பமேளா சென்று மாயமாகி மொழி தெரியாததின் காரணமாக தவித்த பெண்கள் ஊர் திரும்பினர் .

தென்காசியில் இருந்து உத்தரபிரதேசத்தில் நடைபெறும் கும்பமேளாவில் பங்கேற்க சென்ற நிலையில் கூட்ட நெரிசில் சிக்கி மாயமான இரண்டு பெண்கள் - மொழி தெரியாததின் காரணமாக காவல்துறை உதவாத நிலையில் தக்க சமயத்தில் உதவிய தமிழரால் வீடு திரும்பிய நெகிழ்ச்சி சம்பவம்.
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும், கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆன்மிக-கலாசார நிகழ்வுக்கு உலகெங்கிலும் இருந்து துறவிகள், சாதுக்கள், பக்தா்கள் பிரயாக்ராஜில் குவிகின்றனா்.
அந்த வகையில் தென்காசி பகுதியில் இருந்து ஒரு 40 பேர் கொண்ட குழு காசிக்கு ரயில் மூலம் யாத்திரை சென்றுள்ளது. கடந்த 13ஆம் தேதி புறப்பட்டுச் சென்ற இவர்கள் 18ஆம் தேதி காசியில் இருந்து அயோத்தி சென்றுள்ளனர்.
அயோத்தியில் ராமலட்சுமி மற்றும் கஸ்தூரி ஆகிய இரண்டு பெண்கள் மாயமாகியுள்ளது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து மாயமானவர்களை உறவினர்கள் தேடி வந்த நிலையில் விமானம் மூலம் நேரடியாக காணாமல் போனவர்களை தேடும் நோக்கத்தில் காசிக்கு சென்றுள்ளனர் இந்நிலையில் மாயமான இருவரும் இன்று காலை வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.
வீடு திரும்பிய கஸ்தூரி மற்றும் ராமலட்சுமியை உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
தொடர்ந்து காணாமல் போனதை குறித்து கஸ்தூரி கூறுகையில் தாங்கள் அயோத்தி பகுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி தங்கள் குழுவிடமிருந்து தொலைந்ததாகவும் அங்குள்ள காவலர்களிடம் உதவி கேட்டபோது மொழி தெரியாததின் காரணமாக யாரும் உதவும் முன் வரவில்லை எனவும் மொழி தெரியாததால் உணவு உறக்கம் இன்றி தவித்ததாகவும், ரயில் நிலையத்தில் தஞ்சம் புகுந்த நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த மதன் குமார் என்ற நபர் தங்களுக்கு ரயில் டிக்கெட் வாங்க உதவி திருநெல்வேலி வரை உறுதுணையாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.
மேலும் இதுகுறித்து அவர்களது உறவினர்கள் கூறுகையில் தமிழகத்திலிருந்து லட்சக்கணக்கான மக்கள் காசிக்கு சென்று வரும் நிலையில் அங்கு மொழி தெரியாத நபர்களுக்கு உதவும் வண்ணம் மொழிவாரியாக உதவி மையம் அமைப்பதன் மூலம் இவ்வாறான சம்பவங்கள் தவிர்க்கப்படலாம் என தெரிவித்தனர்.
Tags : கும்பமேளா சென்று மாயமாகி மொழி தெரியாததின் காரணமாக தவித்த பெண்கள் ஊர் திரும்பினர் .