யானை தந்தங்களை கடத்தி விற்க முயன்ற 5 பேர் கைது

by Admin / 21-08-2021 01:52:31pm
யானை தந்தங்களை கடத்தி விற்க முயன்ற 5 பேர் கைது

சேலத்தில் யானை தந்தங்களை கடத்தி விற்க முயன்ற 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்த வனத்துறையினர், அவர்களிடமிருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டு தந்தங்களைக் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
தமிழக வனப்பகுதிகளில் கடந்த 2012 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் அதிகப்படியான யானைகள் உயிரிழந்தது. தந்தங்களை கடத்துவதற்காக இந்த யானைகள் வேட்டையாடப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக வனத்துறையின் தலைமை வன உயிரின பாதுகாவலர் தலைமையில் கடந்த 17ஆம் தேதி கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், வன உதவி வனப்பாதுகாவலர் செந்தில்குமார் மற்றும் வனச்சரகர்கள் அடங்கிய குழுவுடன்  தனிப்படை அமைக்கப்பட்டது.  இந்த தனிப்படையினர் தமிழகம் முழுவதும் யானை தந்தம் கடத்தல் கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட 80 கைவினைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

அந்த கைவினைப் பொருட்களை தயாரிக்க கோவை சேலம் பகுதிகளில் இருந்து யானை தந்தங்களை வாங்கி உபயோகப்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது.  இதனிடையே சேலம் வாழப்பாடி பகுதியில் இரண்டு யானை தந்தங்கள் கைமாற இருப்பதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் நேற்று கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தலைமையிலான தனிப்படை குழுவினர் சேலம் வந்தனர்.

பின்னர் தந்தம் கடத்தல் கும்பலிடம் அதனை விலைக்கு வாங்குவது போல் நடித்து ஒரு தந்தம் 10 லட்சம் வீதம் இரண்டு தந்தங்களை 20 லட்சத்திற்கு வாங்கிக் கொள்வதாக கூறி, வாழப்பாடி டோல்கேட் பகுதிக்கு இரண்டு யானை தந்தங்களுடன் கள்ளக்குறிச்சியை சேர்ந்த சசிகுமார், முதுகுளத்தூர் அருகே உள்ள சாத்தனூரை சேர்ந்த சேட்டு மற்றும் அருண்குமார் ஆகியோரை வரவழைத்த தனிப்படை குழுவினர் அவர்களை கைது செய்து தந்தங்களை மீட்டனர்.

 அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த தந்தங்களை கோவையில் இருந்து சேலம் கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் அந்த கடத்தலில் தொடர்புடைய மேட்டூரை சேர்ந்த பரத், பிரவீன்குமார் ஆகியோரையும் வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட 5 பேரையும் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு யானை தந்தங்களையும் சேலம் மாவட்ட வனத்துறையிடம், தனிப்படை குழுவினர்ஒப்படைத்தனர்.

இதையடுத்து சேலம் மாவட்ட வன அலுவலர் முருகன் தலைமையிலான அதிகாரிகள் 5 பேரிடமும் நடத்திய விசாரணையில் இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக தந்தம் கடத்தலில் ஈடுபட்டு வந்ததும் இவர்களுடன் தொடர்புடைய நபர்கள் தமிழக முழுவதும் 15 மாவட்ட மாவட்டங்களில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதுநாள் வரை எத்தனை யானை தந்தங்களை கடத்தி விற்பனை செய்து உள்ளனர். இவர்களுக்கு தந்தங்களை சப்ளை செய்தது யார். யானைகளை கொன்றதில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via