மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் அரசு தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு!
மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கு, அவர்களது கோரிக்கையை காட்டிலும் அதிகமாகவே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு, மனுதாரர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் விவகாரத்தில், மத்திய அரசு எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கான விரிவான மறுவாழ்வு திட்டத்தை செயல்படுத்தக்கோரி, அப்பகுதியை சேர்ந்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில்
மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உச்ச நீதிமன்றம், தற்போது செயல்படுத்தி வரும் மறுவாழ்வு திட்டம் தொடர்பான விபரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.மேலும், மாஞ்சோலை புலிகள் வசிக்கக்கூடிய பகுதியாக இருப்பதால், அங்கு எப்படி மக்களை வசிக்க அனுமதிக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியது. எனவே, இந்த விவகாரத்தில், மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தன் நிலைப்பாட்டை தெரிவிக்கும்படியும் நீதிபதிகள் கூறியிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று (மார்ச் 7) மீண்டும், நீதிபதிகள் விக்ரம்நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா சார்பில் ஆஜரான மற்றொரு அரசு வழக்கறிஞர், 'இந்தப் பிரச்னையில் மத்திய அரசின் நிலைப்பாட்டை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்' என்றார்.
அதை ஏற்ற நீதிபதிகள் இரண்டு வார காலத்திற்குள் எழுத்துப்பூர்வமான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, விசாரணையை, 24ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.இதற்கிடையில், தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'தேயிலை தோட்ட தொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கையை விட அதிகமாகவே, தமிழக அரசு அவர்களுக்கு நிவாரணம் வழங்கி உள்ளது' என்றனர்.
அதை மறுத்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், 'வீட்டுக்கடன் உள்ளிட்டவற்றுக்காக 87 பேர் விண்ணப்பித்தால், அதில், 85 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன' என்றார்.அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'எதுவாக இருந்தாலும் அடுத்த விசாரணையில் பார்த்துக் கொள்ளலாம்' எனக்கூறி, விசாரணயை ஒத்திவைத்தனர்
Tags : மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் அரசு தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு!



















