விலைவாசி உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும்: திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர்

by Editor / 09-10-2021 04:26:01pm
 விலைவாசி உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும்: திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர்

தொடர்ந்து விலைவாசி உயர்ந்து வரும் நிலையில், வாங்கும் சக்தியோ, விலை உயர்வைத் தாங்கும் சக்தியோ மக்களிடம் இல்லை. எனவே, விலைவாசி உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாகத் திருச்சியில் காங்கிரஸ் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் சு.திருநாவுக்கரசர் கூறியதாவது:''உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் சென்ற கார் மோதி விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். அப்போது விவசாயிகளைத் துப்பாக்கியாலும் சுட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய இணையமைச்சரின் மகனைக் கைது செய்யாமல், இணையமைச்சரைப் பதவியில் இருந்து நீக்காமல், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியைச் சட்டவிரோதமாகத் தடுத்து நிறுத்தி, சட்டரீதியாக நடத்தாமல் 24 மணி நேரத்துக்கும் மேலாக மிக மோசமான இடத்தில் தனிமைப்படுத்தி அடைத்து வைத்தனர். பிரியங்கா காந்தியை அவமானப்படுத்தியது மிகவும் கண்டனத்துக்குரியது.

குற்றவாளிகளைச் சுதந்திரமாக நடமாட விட்டுவிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைத் தடுத்து அவர்களைக் குற்றவாளிகளைப் போல் கைது செய்யும் ஜனநாயக விரோதச் செயல் நடைபெற்றுள்ளது.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் சர்வாதிகாரி போலச் செயல்பட்டு வருகிறார். அவரையும் மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும். அஜய் மிஸ்ராவின் மகனை உடனே கைது செய்ய வேண்டும்.

 

மத்திய அரசும் உத்தரப் பிரதேச மாநில அரசும் சட்ட விரோதமாகச் செயல்படுவதை மக்கள் பார்த்துக் கொண்டுள்ளனர். சரியான பாடத்தைச் சரியான நேரத்தில் புகட்டக் காத்திருக்கின்றனர். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று தொடர்ந்து காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. எனவே வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்.

தினம் தினம் பெட்ரோல்- டீசல்- சமையல் காஸ் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால், சாதாரண, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பணம் தேவைப்படும்போதெல்லாம் மத்திய அரசு விலையை உயர்த்தி, லட்சக்கணக்கான கோடி ரூபாயை மக்களிடமிருந்து பறித்துக் கொண்டே இருக்கிறது. எனவே விலைவாசி உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும்.

தொடர்ந்து விலைவாசி உயர்ந்து வரும் நிலையில் வாங்கும் சக்தியோ- விலை உயர்வைத் தாங்கும் சக்தியோ மக்களிடம் இல்லை. கோடான கோடி இளைஞர்கள் வேலையின்றித் தவித்து வரும் நிலையில், தொடர்ந்து சுமையை ஏற்றி வருவது மக்களுக்கு விரோதமாக மத்திய அரசு செயல்படுவதைக் காட்டுகிறது. எனவே விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்.

தமிழ்நாட்டில் மு..ஸ்டாலின் தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது. பிற மாநில முதல்வர்களுக்கு வழிகாட்டும் அளவுக்கு, முன்னுதாரணமாக மு..ஸ்டாலின் தலைமையில் அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தேர்தலின்போது திமுக, காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, நிறைவேற்றப்படும். திருச்சி ஜங்ஷன் பகுதியில் நிறைவடையாமல் உள்ள மேம்பாலப் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கான பணி ஆணை விரைவில் கிடைத்து, பணிகள் விரைவில் தொடங்கப்படும். உத்தரப் பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மத்திய அரசையும் உத்தரப் பிரதேச அரசையும் தமிழ்நாடு முதல்வர் மு..ஸ்டாலின் கண்டித்திருக்கிறார். இதுவே திருப்திகரமானதுதான். திமுகவும் களத்தில் இறங்கிப் போராட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. தேவைப்படும்போது காங்கிரஸுடன் இணைந்து திமுகவினர் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்'' இவ்வாறு திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

 

Tags :

Share via