3ஆம் வகுப்பு மாணவர்களால் ஒன்றாம் வகுப்பு பாடத்தை படிக்க முடியவில்லை நிர்மலா சீதாராமன்.

தமிழ்நாட்டின் கல்வி தரம் கொரோனாவிற்கு பிறகு பின் தங்கியுள்ளதாக சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பேசினார். குறிப்பாக மூன்றாம் வகுப்பு மாணவர்களால் ஒன்றாம் வகுப்பு பாட புத்தகத்தை படிக்க முடியவில்லை என்றும் பேசியுள்ளார். இதற்கு தமிழ்நாட்டு எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இதேபோல், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களை குறித்தும் குறைகூறி பேசியுள்ளார். இதனால், அம்மாநில எம்.பி.க்களும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்.பி., “பாஜக அரசு, தினமும் தமிழ்நாட்டையும், எதிர்க்கட்சியினையும், எதிர்க்கட்சித் தலைவர்களையும் இழிவு செய்கிறது. இன்று மாலை எதிர்க்கட்சித் தலைவர் இழிவுப்படுத்தப்பட்டார். நேற்று தமிழ்நாடு எம்.பி.க்கள் இழிவுப்படுத்தப்பட்டனர்” எனத் தெரிவித்தார்.
இதேபோல், காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கௌரவ் கோகோய், “மத்திய நிதி அமைச்சர், சில தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல்களை மட்டும் தெரிவித்து, தமிழ்நாட்டு மக்களை அவமரியாதை செய்ய முயற்சிக்கிறார். ஒவ்வொரு நாளும், அமைச்சர்கள் தங்களின் கருத்தால், வெவ்வேறு மாநில மக்களை இழிவு செய்வதை பார்க்கிறோம். குறிப்பாக பாஜக ஆளாத மாநில மக்களை இழிவு செய்கிறார்கள். இது மீண்டும் மீண்டும் நிகழ்கிறது” என்று தெரிவித்தார்.
Tags : 3ஆம் வகுப்பு மாணவர்களால் ஒன்றாம் வகுப்பு பாடத்தை படிக்க முடியவில்லை நிர்மலா சீதாராமன்