யூ-டியூபர் பப்ஜி மதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை சரியே! அறிவுரைக் கழகம் உறுதி
யூ-டியூபர் பப்ஜி மதன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறிவுரைக் கழகம் உறுதி செய்துள்ளது.
தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை சட்டவிரோதமான இணையதள இணைப்பு மூலம் இணைத்து அந்த விளையாட்டில் பல சிறுவர், சிறுமிகளை ஆபாசமாக பேசியது தொடர்பாக பப்ஜி மதன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடந்த ஜூன் 18 ஆம் தேதி தர்மபுரியில் வைத்து அவரை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து பப்ஜி மதனின் 2 சொகுசுக் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன. மேலும், பப்ஜி மதன் பயன்படுத்தி வந்த யூ-டியூப், இன்ஸ்டாகிராம் கணக்குகளும் முடக்கப்பட்டன.
மேலும், இந்த வழக்கில் மதனுக்கு உதவியாக இருந்த அவருடைய மனைவி கிருத்திகாவும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 6 ஆம் தேதி மதன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். பின்னர் மதன் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டம் தொடர்பான விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள அறிவுரை கழகத்தில் நடத்தப்பட்டு, கடந்த 6 ஆம் தேதி மதன் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார்.
அறிவுரைக் கழகத்தின் உறுப்பினர்கள் ரகுபதி, ராமன் மற்றும் மாசிலாமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நடைபெற்ற இந்த விசாரணையின் போது மதன், தான் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட விளையாட்டை விளையாடவில்லை எனவும், தன்னால் யாரும் பாதிக்கப்படவில்லை எனவும் தெரிவித்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் யூ-டியூபர் பப்ஜி மதன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை செல்லும் எனக்கூறி அறிவுரைக் கழகம் அதை உறுதி செய்துள்ளது. ஏற்கனவே மதன் தரப்பு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் மனுவுக்கு தமிழக அரசும், சென்னை காவல் ஆணையரும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :