கடையநல்லூரில் அண்ணாமலைநாதர் கோயிலுக்குச் சொந்தமான நிலம் விவகாரம்-நீதிமன்றம் உத்தரவு.

by Editor / 02-04-2025 11:58:22pm
கடையநல்லூரில் அண்ணாமலைநாதர் கோயிலுக்குச் சொந்தமான நிலம் விவகாரம்-நீதிமன்றம் உத்தரவு.

தென்காசி அருகே கடையநல்லூரில் உள்ள அண்ணாமலைநாதர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து குடியிருந்தவர்களை அப்புறப்படுத்த அறநிலையத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எதிராக தென்காசியைச் சேர்ந்த உடுமன் மொஹிதீன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில், அறநிலையத்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கடையநல்லூர் அண்ணாமலைநாதர் கோயிலுக்கு சொந்தமான இடத்தை பொது ஏலத்தில் விற்பனை செய்ய கோயில் நிர்வாகம் முடிவு செய்து. அந்த இடத்தை கடந்த 1995-ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டது.

அறநிலையத்துறையின் கவனத்துக்கு கொண்டு செல்லாமல் தன்னிச்சையாக இடம் விற்பனை செய்யப்பட்டதாக 1997-ல் நில விற்பனை உத்தரவை அறநிலையத் துறை ஆணையர் ரத்து செய்து உத்தரவிட்டார். தன்னிச்சையாக விற்பனை செய்யப்பட்ட கோயில் நிலத்தை யாரும் உரிமை கோர முடியாது என தென்காசி மாவட்ட நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், கோயில் நிலத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் 81 ஆக்கிரமிப்பாளர்கள் வாடகை தர அறநிலையத்துறை உத்தரவிட்டது. ஆனால், கோயில் இடத்திற்கு வாடகை தர முடியாது என ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆக்கிரமிப்பை அகற்ற அறநிலையத் துறைக்கு உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.


இந்த வழக்கு நீதிபதிகள், ஆர்.சுரேஷ்குமார், மரியா கிளாடி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது அறநிலையத்துறை சார்பில், கோயில் நிலத்தை ஆக்கிரமித்து குடியிருந்த அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனை 58 பேர் ஏற்றுக் கொண்டனர். 23 பேர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என வாதிடப்பட்டது.

தொடர்ந்து உத்தரவிட்ட நீதிபதிகள், "கோயில் நிலங்களை யாரும் ஆக்கிரமிப்பு செய்ய அனுமதிக்க முடியாது. அனைவருக்கும் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி வாடகையை வசூலிக்க வேண்டும். வாடகை தர எதிர்ப்பு தெரிவிப்பவர்களை அப்புறப்படுத்தும் போது சட்டம் -ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க காவல் துறை போதிய பாதுகாப்பை வழங்க வேண்டும்."என்று தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கின் விசாரணையை 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

 

Tags : கடையநல்லூரில்

Share via