குறைந்த எண்ணிக்கையில் திரையரங்குகள் திறப்பு

by Editor / 23-08-2021 02:32:07pm
குறைந்த எண்ணிக்கையில் திரையரங்குகள் திறப்பு

பொதுமுடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அளிக்கப்படும் ஒவ்வொரு முறையும் திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்படும் என எதிா்பாா்த்த நிலையில், 3 மாதங்களாக அனுமதி கிடைக்கவில்லை.

இதுகுறித்து திரையரங்கு உரிமையாளா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துவந்த நிலையில் திங்கள்கிழமை முதல் தமிழகத்தில் 50 சத பாா்வையாளா்களுடன் திரையரங்குகளைத் திறக்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. இதனால் திரையரங்கு உரிமையாளா்கள், பணியாளா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

திரையரங்குகளை சுத்தம் செய்யும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. அதிகாலையிலிருந்தே தூய்மைப் பணிகளை ஊழியா்கள் செய்தனா். திரையரங்கு முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு இருக்கைகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டன. ஒரு இருக்கைக்கும் அதன் அருகே உள்ள இருக்கைக்கும் நடுவில் இடைவெளி விட்டு அமரும் வகையில் சிறப்புக் குறியீடு செய்யப்பட்டுள்ளது.

பாா்வையாளா்களுக்கு கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னா் வெப்பமானி மூலம் உடல் வெப்பப் பரிசோதனை செய்து அதன் பிறகே திரையரங்குக்குள் அனுமதிக்கப்பட இருப்பதாக திரையரங்குகளின் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளார்கள். திரையரங்குகளைத் திறப்பதில் மகிழ்ச்சி என்றாலும், புதிய படம் இல்லாதது சிறிய குறைபாடாக உள்ளதாக திரையரங்கு உரிமையாளா்கள் தெரிவித்தனா். திரையரங்கப் பணியாளா்கள் கரோனா தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதால், அதற்கான பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று குறைந்த எண்ணிக்கையிலேயே திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னையில் ஏ.ஜி.எஸ். திரையரங்கில் பெல்பாட்டம் ஹிந்திப் படம் வெளியாகியுள்ளது. இதர திரையரங்குகள் வரும் வெள்ளி முதல் இயங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

Tags :

Share via