தமிழக கேரள எல்லையில் உள்ளே வெளியே - கஞ்சா-புகையிலைகடத்தல் - 4 வாலிபர்கள் கைது.

by Editor / 25-04-2025 11:36:50pm
தமிழக கேரள எல்லையில் உள்ளே வெளியே - கஞ்சா-புகையிலைகடத்தல் - 4 வாலிபர்கள் கைது.

தமிழக-கேரள எல்லையான ஆரியங்காவில் உள்ள மதுவிலக்கு போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது, தென்காசியில் இருந்து கேரள மாநிலம் காயங்குளம் நோக்கி சென்ற கேரளா அரசு பேருந்து ஒன்றை மறித்து அதிலிருந்த பயணிகளை போலீசார் சோதனை செய்துள்ளனர்.அப்போது, 2 இளைஞர்கள் வைத்திருந்த டிராவல் பேக்கை சோதனை செய்தபோது, அதில் 12 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த 2 பேரை கைது செய்து  விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, அந்த இளைஞர்கள் பாலக்காடு பகுதியை சேர்ந்த முபாஷிர், பிரஜோத் என்பது தெரியவந்தது.

இதேபோன்று தமிழக- கேரளா எல்லை வழியாக சொகுசு காரில் கடத்திக் கொண்டு வந்து தமிழகத்தை சேர்ந்த நபர்களிடம் இலத்தூர் விலக்கு பகுதியில் விற்பனை செய்து கொண்டிருப்பதாக இலத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

 தகவலின் அடிப்படையில், இலத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பான் மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த நபர்களை பிடிக்க முயற்சி செய்துள்ளனர்.

 அப்பொழுது, போலீசாரை பார்த்த அந்த கும்பல் தப்பி ஓடவே விரட்டி சென்ற போலீசார் அதில் 2 நபர்களை துரத்தி பிடித்து கைது செய்தனர்.

மற்ற 4 நபர்கள் தப்பி சென்ற நிலையில், பிடிபட்ட 2 நபர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி உள்ளனர்.

 அப்பொழுது, பிடிபட்ட நபர் கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த சித்திக் என்பதும் அவருடன் சேர்ந்து பிடிபட்ட நபர், சித்திக்கிடம் பான் மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்களை வாங்க சென்ற தென்காசி பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பதும் தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து, அவர்களிடம் இருந்த சுமார் 121 கிலோ மதிப்பிலான பான்மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்த நிலையில் அவர்களிடமிருந்த சொகுசு கார் மற்றும் ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவைகளையும் பறிமுதல் செய்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பியோடிய 4 பேரை வலை வீசி தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags : தமிழக கேரள எல்லையில் உள்ளே வெளியே - கஞ்சா-புகையிலை கடத்தல் - 4 வாலிபர்கள் கைது.

Share via

More stories