சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உடல் அடக்கம் - கண்ணீரில் மூழ்கிய மைலோடு கிராமம்.

by Editor / 29-04-2025 09:05:04am
 சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உடல் அடக்கம் - கண்ணீரில் மூழ்கிய மைலோடு கிராமம்.

 திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில்  நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உட்பட8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சம்பவம் குறித்து அறிந்தவுடன், நாங்குநேரி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் டாக்டர் . பிரசன்ன குமார் ஐபிஎஸ் உடனடியாக தனது டாக்டர் மனைவியுடன் விரைந்து சென்று  மீட்புப் பணியில் ஈடுபட்டார். உயிருக்கு போராடியவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மருத்துவக் குழு வருவதற்கு முன்பாக தனது மனைவியுடன் இணைந்து முதலுதவியும் அளித்தார். அவரது மனைவி, சம்பவ இடத்தில் இருவர் உயிரிழந்ததை உறுதிசெய்ததுடன், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணியில் கணவருக்கு உறுதுணையாக இருந்தார். துரிதமாக செயல்பட்டு டாக்டரான மனைவியையும் அழைத்து வந்து உதவிய டாக்டர் பிரசன்ன குமாருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவரது மனிதாபிமானமிக்க செயல் பல உயிர்களைக் காப்பாற்றியதாக பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே விபத்தில் பலியான ஆறு பேரில் உடல்களும் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள மயிலோடு கிராமத்தில் அவர்களுக்கு சொந்தமான வீட்டு தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.  விபத்தில் கட்டட  காண்ட்ராக்டர் ஆன தனிஸ்லாஸ் (65), அவரது மனைவி மார்க்ரட் மேரி (60), அவரது மகன் ஜோபர் (40), அவரது மனைவி அமுதா (35), பேரன் ஜோகன் (1), பேத்தி ஜோகனா (7) ஆகிய அனைவரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தனிஷ்லாஸின் மற்றொரு பேத்தியான ஜோபினா (7) உயிருக்கு ஆபத்தான நிலையில் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

Tags : சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உடல் அடக்கம்

Share via