காவல்கிணறு அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி ₹36 லட்சம் கொள்ளை.

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே காவல்கிணறு பகுதியில் நேற்று (மே 5) தனியாருக்குச் சொந்தமான பெட்ரோல் பங்க், ஓட்டல் மற்றும் வணிக அங்காடியில் வசூலான ₹36 லட்சத்து 6 ஆயிரத்தை பங்க் ஊழியர் முருகன் (50) என்பவர் இஸ்ரோ மையம் முன்புள்ள அரசு வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் செலுத்துவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மூன்று மர்ம நபர்கள் முருகனை வழிமறித்து தாக்கியுள்ளனர். பின்னர், அவரிடமிருந்த ₹36 லட்சத்து 6 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.முருகனின் தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பங்க் ஊழியர்கள் கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். எனினும், அவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து பணகுடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பியோடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags : காவல்கிணறு அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி ₹36 லட்சம் கொள்ளை.