மனைவியின் திருமணத்தை மீறிய உறவால் மாமியார் உள்ளிட்ட 3 பேர் கொலை.

by Editor / 15-05-2025 08:17:23am
மனைவியின் திருமணத்தை மீறிய உறவால் மாமியார் உள்ளிட்ட 3 பேர் கொலை.

ராணிப்பேட்டை மாவட்டம் கொடைக்கல் அடுத்த புதுக்குடியானூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலு (வயது 30). இவருக்கும் புவனேஸ்வரி என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது.

பாலுவுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக புவனேஸ்வரி அவரை பிரிந்து தன் தாய் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தன்னுடைய உறவுக்காரரான விஜய் (வயது 26) என்பவருடன் அவர் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.இதனால் புவனேஸ்வரி தற்போது 8 மாதங்கள் கர்ப்பமாகவும் இருந்துள்ளார். தனது மனைவியின் இந்த விவகாரம் தெரிந்த பாலு மிகவும் ஆத்திரமடைந்துள்ளார். மேலும் தனது மனைவி தன்னுடன் வாழாமல் தாய் வீட்டில் இருந்ததற்கு தன் மாமியாரே காரணம் என நினைத்துள்ளார். எனவே மதுபோதையில் மாமியார் பாரதி வீட்டிற்கு வந்த பாலு, அவரின் பின்பக்க தலை மற்றும் கழுத்து ஆகிய பகுதிகளில் கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.மேலும் ஆத்திரம் அடங்காத அவர், இந்த பிரச்சனைக்கு காரணமான விஜய்யை கொல்ல, குடியானூர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் தேடி வந்த நேரம் அங்கு விஜய் இல்லாததால், விஜய்யின் தந்தை அண்ணாமலை மற்றும் தாய் ராஜேஸ்வரி ஆகியோரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.இந்த சம்பவம் குறித்து தற்போது வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், பாலுவை தேடி வருகிறார்கள். 

மேலும் உயிரிழந்தவர்களின் பிரேதத்தை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.திருமணத்தை மீறிய உறவால், ஒரே இரவில் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 

Tags : மனைவியின் திருமணத்தை மீறிய உறவால் மாமியார் உள்ளிட்ட 3 பேர் கொலை.

Share via