தூத்துக்குடி கிணற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் 5 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு - எம்பி, கலெக்டர் நேரில் அஞ்சலி.

தூத்துக்குடி அருகே மீரான்குளம் பகுதியில் வேன் ஒன்று கிணற்றில் பாய்ந்த விபத்தில் உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை உட்பட ஐந்து பேரின் உடல்கள் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த துயர சம்பவத்திற்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
நேற்று (17.05.2025) தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மீரான்குளம் பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்தில், கோயம்புத்தூரிலிருந்து திருச்செந்தூர் நோக்கிச் சென்ற வேன் நிலைதடுமாறி சாலையோரத்திலிருந்த கிணற்றில் விழுந்தது.
இதில் ரவி கோயில்பிச்சை (60), ஹெச்சியா கிருபாகரன் (49), மோசஸ் (50), வசந்தா (49) மற்றும் குழந்தை ஸ்டாலின் (1½) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.இன்று திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பின்னர், ஐந்து பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
முன்னதாக, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி பாலன் மற்றும் அரசு அதிகாரிகள் மருத்துவமனைக்கு நேரில் வந்து உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். எம்பி கனிமொழி கருணாநிதி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து ஆறுதல் கூறினார்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார். இதனிடையே, கிணற்றில் மூழ்கியுள்ளதாக கூறப்படும் 20 சவரன் நகைகளை மீட்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று நகைகள்,பணம்,கைப்பை ,உள்ளிட்டவைகளும் மீட்கப்பட்டன.
Tags : தூத்துக்குடி கிணற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் 5 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு - எம்பி, கலெக்டர் நேரில் அஞ்சலி