தமிழக அரசு  கல்லூரிகளில்  சேர 13 நாட்களில் 1.61 லட்சம் பேர் விண்ணப்பம்.

by Editor / 21-05-2025 10:05:08am
தமிழக அரசு  கல்லூரிகளில்  சேர  13 நாட்களில் 1.61 லட்சம் பேர் விண்ணப்பம்.

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 13 நாட்களில் ஒரு லட்சத்து 61 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். புதிய பாடப்பிரிவுகளுக்கும் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


தமிழகத்தில் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இவற்றில் இளநிலைப் படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்கள் உள்ளன. கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் செயல்படும் இக்கல்லூரிகளில் கட்டணம் குறைவு காரணமாக மாணவர்கள் சேர்க்கைக்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். வழக்கம்போல இந்த ஆண்டும் வணிகவியல், ஆங்கிலம், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த மே 7-ஆம் தேதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது. கடந்த மே 19-ஆம் தேதி வரை 13 தினங்களில் மட்டும் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 324 பேர் விண்ணப்பங்களைப் பதிவு செய்துள்ளனர். இதில் 75 ஆயிரத்து 959 மாணவிகள் உட்பட ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 698 பேர் விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தியுள்ளனர். மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வரும் மே 27-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு குறைந்தபட்சம் 3 லட்சம் பேர் விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags : தமிழக அரசு  கல்லூரிகளில்  சேர 13 நாட்களில் 1.61 லட்சம் பேர் விண்ணப்பம்.

Share via