கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் மோசடி... டிப்டாப் ஆசாமியை தேடி வரும் போலீஸ்...

by Admin / 26-08-2021 12:54:01pm
கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் மோசடி... டிப்டாப் ஆசாமியை தேடி வரும் போலீஸ்...

கன்னியாகுமரி அருகே வியாபாரியின் கவனத்தை திசை திருப்பி நூதன முறைடியில் பண மோசடியில் ஈடுபட்ட டிப்டாப் ஆசாமியை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
 
கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஹெர்ட்சன். இவர் அந்த பகுதியில் கே.எஸ்.ஆர் ஸ்டோர் என்ற மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார்.  இவரது கடைக்கு கடந்த சனிக்கிழமை டிப்டாப் உடையணிந்து வந்த வாலிபர், தனக்கு 2 பாக்கெட் கேக் வேண்டும் என கேட்டுள்ளார்.

 அதன்படி வியாபாரி ஹெர்ட்சன் கேக் பாக்கெட்டை எடுத்து கொடுத்தார்.  அப்போது, டிப்டாப் ஆசாமி இரண்டாயிரம் ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார்.  மீதி தொகை ஆயிரத்து 920 ரூபாய் வாங்கிய பிறகு, தன்னிடம் சில்லறை இருப்பதாக கூறிய அந்த வாலிபர், வியாபாரியிடம் கொடுத்திருந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டை பெற்றுக்கொண்டார்.

பின்னர் அந்த டிப்டாப் ஆசாமி, தனது செல்போனை எடுத்து ஏதோ ஒரு நபருக்கு பேசுவது போல் பேசிவிட்டு செல்போனை துண்டித்து விட்டு மீண்டும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை  நீட்டியவாறு மேலும் சில பொருட்களை காட்டி விலை கேட்டு வியாபாரியின் கவனத்தை திசைதிருப்பியுள்ளார்.

மேலும் அந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டை தனது பாக்கெட்டில் நுழைத்துக் கொண்ட டிப்டாப் ஆசாமி,  மீண்டும் மீதி தொகையை வியாபாரியிடம் கேட்டுள்ளார். அதற்கு மீதித் தொகையை தந்துவிட்டதாக கூறிய வியாபாரியிடம் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கேக் பாக்கெட்டுடன் மீதித் தொகையான ஆயிரத்து 920 ரூபாயை கொடுத்துள்ளார் அந்த வியாபாரி. அந்த வாலிபர் சென்றபிறகு சந்தேகமடைந்து, கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த வியாபாரி ஹெர்ட்சனுக்கு அதிர்ச்சி அளித்தது.

அந்த டிப்டாப் வாலிபர் தன்னை நூதன முறையில் கவனத்தை திசைதிருப்பி பண மோசடியில் ஈடுபட்டதை அறிந்த ஹெர்ட்சன், இதுகுறித்து போலிசாரிடம் புகார் அளித்தார். இதன் பரில் அந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags :

Share via