குமரி ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்தவர் தானம்மாள். இவர் கடந்த 40 ஆண்டுகளாக அதே பகுதியில் செயல்பட்டு வரும் சந்தையில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். தற்போது சந்தையைக் குத்தகைக்கு எடுத்த நபர் மூதாட்டி தானம்மாளை மீன் வியாபாரம் செய்யக்கூடாது என கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளான மூதாட்டி இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளார்.
ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்த மூதாட்டி தானம்மாள் திடீரென ஆட்சியர் அலுவலகத்தின் முன்னே தலையில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரைத் தடுத்து நிறுத்தி உடலில் தண்ணீரை ஊற்றி அவரை மீட்டனர்.
இந்நிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென மூதாட்டி மயங்கி கீழே விழுந்தார். இதைத் தொடர்ந்து போலீசார் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags :



















