ஆப்கானிஸ்தானில் இருந்து இன்று மேலும் 180 பேர் 2 விமானங்களில் அழைத்து வரப்படுகின்றனர்

by Admin / 26-08-2021 05:00:15pm
ஆப்கானிஸ்தானில் இருந்து இன்று மேலும் 180 பேர் 2 விமானங்களில் அழைத்து வரப்படுகின்றனர்

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்கள் உள்பட 800-க்கும் மேற்பட்டோரை இந்தியா இதுவரை மீட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு இருக்கும் வெளிநாட்டினர் தங்கள் நாடுகளுக்கு செல்ல முயற்சித்து வருகிறார்கள். இதையடுத்து அந்தந்த நாடுகள் விமானங்களை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு அனுப்பி தங்கள் குடிமக்களை மீட்டு வருகின்றன.

 இதேபோல் அங்கிருந்து வெளியேற விரும்பும் மக்களையும் விமானங்களில் ஏற்றி அழைத்து செல்கிறார்கள். காபூல் விமான நிலையத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்க ராணுவம் மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. இதற்காக ஏர்- இந்தியா விமானம் மற்றும் இந்திய விமானப்படை விமானங்களை பயன்படுத்தி வருகிறது.

காபூல் விமான நிலையத்துக்கு அனுப்பப்படும் இந்திய விமானப்படை விமானம் அங்கு இருக்கும் இந்தியர்கள் மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள், பிற நாட்டவர்களையும் மீட்டு கொண்டு வருகிறது.

ஏர் இந்தியா விமானம்

தஜிகிஸ்தான், கத்தாரின் தோகாவுக்கு அழைத்து செல்லப்படும் அவர்கள் ஏர்-இந்தியா விமானங்கள் மூலம் டெல்லிக்கு கொண்டு வரப்படுகிறார்கள். மேலும் காபூலில் இருந்து டெல்லிக்கு நேரடியாகவும், இந்திய விமானப்படை விமானம் இயக்கப்படுகிறது.

இந்த மீட்பு நடவடிக்கைகளுக்கு ‘ஆபரே‌ஷன் தேவி’ என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இதுவரை ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்கள் உள்பட 800-க்கும் மேற்பட்டோரை இந்தியா மீட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று ஆப்கானிஸ்தானில் இருந்து 24 இந்தியர்கள், நேபாளத்தை சேர்ந்த 11 பேர் என 35 பேர் மீட்கப்பட்டு விமானம் மூலம் டெல்லிக்கு வந்து கொண்டிருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் இன்று இந்திய விமானப்படை மூலம் காபூலில் இருந்து 180 பேர் வரை 2 விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில் இந்தியர்கள், ஆப்கான் சீக்கியர்கள் மற்றும் இந்துக்களும் அடங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via