பாலிஷ் செய்து நகையை மோசடி செய்த வடமாநில வாலிபர்கள் 6 பேர் கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நகையை பாலிஷ் செய்து தருவதாக நகையை மோசடி செய்த பீகாரை சேர்ந்த 6 வாலிபர்கள் கைது. ஆலங்குளம் அருகே உள்ள ஆலடிப்பட்டி என்ற கிராமம் உள்ளது. கடந்த 21.06.25 அன்று காலை 09.15 க்கு நகை பாலிஷ் போடுவதாக கூறி, இரண்டு பைக்குகளில் வட மாநில வாலிபர்கள் ஆறு பேர் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது . பைக்கை வேறு இடத்தில் நிறுத்தி விட்டு 2 பேர் மட்டும் சென்று ஆலடிப்பட்டி திருவள்ளுவர் தெருவில் வீட்டொடு சேர்ந்து பலசரக்கு கடை நடத்தி வரும் வைத்திலிங்கம் மனைவி ராஜபுஷ்பம் வயது 67 மூதாட்டியிடம் நைசாக பேச்சுக் கொடுத்துள்ளனர் .தங்களிடம் நகை பாலிஷ் செய்யும் பொடி உள்ளதாகவும் அதில் பாலிஷ் செய்தால் நகை பளபளப்பாக மாறிவிடும் எனவும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனையடுத்து ராஜபுஷ்பம் வீட்டிற்கு பக்கத்து வீட்டு பெண் ஒருவர் வெள்ளி கொலுசை கழட்டி கொடுத்துள்ளார். அதனை பாலிஷ் செய்து திரும்ப அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளனர் . இதனை பார்த்த ராஜபுஷ்பம் அவரது கழுத்தில் கிடந்த சுமார் 16 கிராம் எடையுள்ள செயினை பாலிஷ் செய்ய கொடுத்துள்ளார் . இதனை வாங்கிய வட மாநில வாலிபர்கள் அவர்கள் கொண்டு வந்திருந்த கெமிக்கலில் போட்டு செயினை பாலிஷ் செய்தனர். இவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த
அங்கு வந்த மூதாட்டியின் மகன் இசக்கிமுத்து அவர்களிடம் இருந்த நகையை பறித்து கொண்டு உங்களை குறித்து போலீசிற்கு தகவல் அளிக்கப் போவதாக கூறியவுடன் வாலிபர்கள் தப்பி ஒடியுள்ளனர்.
பின்னர் சந்தேகத்தின் பேரில் இசக்கிமுத்து அந்த செயினை நகை கடை சென்று எடை போட்டுபார்த்ததில் , செயினின் எடை 2½ கிராம் குறைவாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து, ஆலங்குளம் காவல் நிலையத்தில் வட மாநில நபர்களின் மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் ஆலங்குளம் காவல் ஆய்வாளர் பெர்னார்ட் சேவியர், உதவி ஆய்வாளர் சத்தியவேந்தன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர் . நேற்று காலை 10 மணிக்கு சிவலார்குளம் விலக்கு அருகில், இரண்டு பைக்கில் வந்த ஆறு வட மாநில வாலிபர்களை பிடித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர் . சந்தேகத்தின் பேரில் தீவிர விசாரணையில் அவர்கள் நகை பாலிஷ் போடுவது போன்று ஆசிட்டில் போட்டு நகையின் எடையை குறைத்து மேற்படி குற்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் இவர்கள் மீது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இதே மாதிரியான நகை மோசடி வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது . மேலும் விசாரணையில் பிடிபட்ட வாலிபர்கள் ஸ்ரவன்குமார் ஷா (வயது21), சூராஜ்குமார் ஷா (வயது31), அமர்குமார் ஷா (வயது26), அஜித்குமார் ஷா (வயது20), மனிஷ்குமார் ஷா (வயது20), சோனுகுமார் ஷா (வயது17) என்பதும் இவர்கள் ஆறு பேரும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 2½ கிராம் நகை மற்றும் இரண்டு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
Tags :