பண்ருட்டி அருகே வியாபாரியிடம் முந்திரி வாங்கி ரூ.70 லட்சம் மோசடி

by Admin / 26-08-2021 05:19:35pm
பண்ருட்டி அருகே வியாபாரியிடம் முந்திரி வாங்கி ரூ.70 லட்சம் மோசடி

 

பண்ருட்டி அருகே வியாபாரியிடம் முந்திரி வாங்கி ரூ.70 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பணிக்கன்குப்பத்தை சேர்ந்தவர் நெப்போலியன் மகன் வில்லியம் ஷேக்ஸ்பியர் (வயது 30). இவர் அதே பகுதியில் தனியார் முந்திரி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். அங்கு பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டை சேர்ந்த ஜான்பீட்டர் (40) என்பவர் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
 
இந்த நிலையில் வில்லியம் ஷேக்ஸ்பியர், ஜான்பீட்டர் ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பண்ருட்டி அடுத்த வீரசிங்கன்குப்பத்தை சேர்ந்த முந்திரி வியாபாரி அருள் (53) என்பவரை சந்தித்து, தங்கள் நிறுவனத்திற்கு முந்திரி வினியோகம் செய்யுமாறு கூறியுள்ளனர்.

இதையடுத்து அருள், ரூ.60 லட்சம் மதிப்பிலான முந்திரியை அவர்களிடம் விற்பனை செய்துள்ளார். பின்னர் அவர்களிடம் முந்திரிக்கான தொகை ரூ.60 லட்சத்தை தரும்படி அருள் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் கேரளாவில் இருந்து 75 டன் முந்திரி வருவதாகவும், பணத்திற்கு பதிலாக அந்த முந்திரியை கொடுத்து விடுவதாகவும் கூறினர். மேலும் அந்த முந்திரியை வாங்கி கொண்டுவர போக்குவரத்து செலவுக்கு ரூ.10 லட்சம் தரும்படி கேட்டுள்ளனர்.

இதை நம்பிய அருள், அவர்களிடம் ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட வில்லியம் ஷேக்ஸ்பியர், ஜான்பீட்டர் ஆகியோர் நீண்ட நாட்கள் ஆகியும் முந்திரி மற்றும் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதனால் அருள், தனக்கு தர வேண்டிய மொத்தம் ரூ.70 லட்சத்தை தரும்படி அவர்களிடம் சென்று கேட்டுள்ளார்.

அப்போது வில்லியம் ஷேக்ஸ்பியர், ஜான்பீட்டர் ஆகியோர் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததுடன், அருளை இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது தான் இருவரும் தன்னிடம் முந்திரி மற்றும் பணம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டது அவருக்கு தெரியவந்தது.

இதுகுறித்து அருள், முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து அந்த வழக்கு கடலூர் மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இதையடுத்து ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக வில்லியம் ஷேக்ஸ்பியர், ஜான்பீட்டர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via