விஸ்வரூபம் எடுத்துள்ள கொடநாடு கொலை வழக்கு: சூடுபிடிக்கும் விசாரணை

by Admin / 27-08-2021 12:58:45pm
விஸ்வரூபம் எடுத்துள்ள கொடநாடு கொலை வழக்கு: சூடுபிடிக்கும் விசாரணை

தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை, செப்டம்பர் 2-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில், கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கை, போலீசார் மீண்டும் விசாரிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர் சயான், கொடநாடு வழக்கில் அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை, போலீசாரிடம் சயான் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, ஜெயலலிதாவின் கார் டிரைவராக பணியாற்றிய சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த கனகராஜின் மரணம் விபத்து அல்ல என்றும், திட்டமிட்ட கொலை எனவும், அவரது சகோதரர் தனபால் கூறியுள்ளார். இது தொடர்பாகவும் போலீசார் விசாரித்து, அந்த விவரங்களை வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர்.
 
இந்நிலையில், கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை, நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. முக்கிய சாட்சியாக கருதப்படும் சயான், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சயான் மற்றும் தனபால் அளித்த வாக்குமூலம் அடங்கிய அறிக்கையை போலீசார் தாக்கல் செய்தனர். அவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், மேலும் சிலரிடம் விசாரிக்க போலீசார் அனுமதி கேட்டனர். அ.தி.மு.க. வில் சில முக்கிய புள்ளிகளின் பெயரை குறிப்பிட்டு, நீதிபதியிடம் மனு கொடுத்ததாக தெரிகிறது.

 இதனையடுத்து, வழக்கு விசாரணை செப்டம்பர் 2-ம் தேதிக்கு ஒத்தி வைத்து, நீலகிரி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கின் சாட்சிகளில் ஒருவரான கோவையைச் சேர்ந்த ரவி தொடர்ந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், கீழமை நீதிமன்ற வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரவி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது

 

Tags :

Share via