ஒரே நாளில் அடுத்தடுத்த டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் கைவரிசை காட்டிய ’தொப்பி’ கொள்ளையர்கள்…

by Admin / 27-08-2021 12:54:59pm
ஒரே நாளில் அடுத்தடுத்த டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் கைவரிசை காட்டிய ’தொப்பி’ கொள்ளையர்கள்…

சென்னை சாலிகிராமத்தில் இரவு நேரத்தில் அடுத்தடுத்த டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களின் கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  

 சென்னை சாலிகிராமம் காவேரி ரங்கன் நகரில் முனீஸ்வரன் என்பவர் பெருமாள் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் நடத்தி வருகிறார்.

 கடந்த செவ்வாய் கிழமை இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு ஊழியர்கள் கடையை பூட்டி சென்றுள்ளனர். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது, கடையின் ஷட்டரில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 மேலும், உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் கல்லாவில் இருந்த ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அதே பகுதியில் உள்ள  முருகன் என்பவர் நடத்தி வரும் ராஜா இன் என்ற டிபார்ட்மெண்டல் ஸ்டோரின் ஷட்டரின் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளனர்

. ஆனால் பூட்டை உடைக்க முடியாததால், எதிரே உள்ள மயூரா என்ற ஆடைகள் விற்பனை செய்யும் கடையின் பூட்டை உடைத்து  உள்ளனர். ஆனால் கடையில் பணம் எதுவும் இல்லாததால் ஆத்திரத்தில் பொருட்களை எல்லாம் சிதறடித்துள்ளனர்.

இந்த புகார் தொடர்பாக புதன்கிழமை காலையில் விருகம்பாக்கம் போலீசார் பூட்டு உடைக்கப்பட்ட கடைகளில் விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது,

அதில் இருந்து 50 மீட்டர் தொலைவில் 70 வயது மூதாட்டி ராதா என்பவர் காய்கறி வாங்குவதற்காக வந்த போது, போலீஸ் எனக் கூறி இரண்டு நபர்கள் தங்க நகையை பத்திரமாக வைத்துக் கொள்ளும்படி கூறி பொட்டலம் போட்டு கொடுத்து 12 சவரன் தங்க நகையை கவனத்தைத் திசைதிருப்பி கொள்ளையடித்து சென்றது விருகம்பாக்கம் போலீசாருக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.


 


இதுதொடர்பாக கொள்ளையடிக்கப்பட்ட கடைகளில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகளை வைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சி.சி.டி.வி காட்சிகளில் இருசக்கர வாகனத்தில் வரும் இரண்டு நபர்களில் ஒருவர் மங்கி குல்லா அணிந்து இருப்பதும் மற்றொருவர் தொப்பியை அணிந்து அவரின் உருவம் தெளிவாக தெரிகிறது. மேலும் இவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதே கொள்ளையர்கள் கோடம்பாக்கம் புலியூரில் 9 அடுத்தடுத்து உள்ள கடைகளை உடைத்து கொள்ளையடித்து சென்றது தொடர்பாக கோடம்பாக்கம் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்த பகுதிகளில் ஏராளமான கடைகளை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

 

Tags :

Share via