பிரபல பெயிண்ட் நிறுவனத்தின் பெயரில் போலி பெயிண்ட் தயாரித்து விற்பனை!
பிரபல பெயிண்ட் நிறுவனத்தின் பெயரில் போலி பெயிண்ட் தயாரித்து விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் மீது அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
சென்னையில் உள்ள பல கடைகளில் பிரபல பெயிண்ட் நிறுவனத்தின் பெயரில் போலியான பெயிண்ட் விற்கபடுவதாக அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தது.
அதனடிப்படையில் சென்னை வானகரம், செட்டியார் அகரம் முதல் தெருவில் உள்ள ஜெயம் ஷாப்பிங் காம்பிளக்சில் உள்ள கிருஷ்ணா வன்பொருளகம் மற்றும் மின்பொருளகம் கடையில் நடத்தப்பட்ட சோதனையில் பிரபல பெயிண்ட் நிறுவனத்தின் பெயரில் போலியாக தயாரித்த 45 பெயிண்ட் டப்பாக்கள், 11 போலியான சுவர் புட்டி பைகள், 250 காலி டப்பாக்கள், போலியான வில்லைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அதே போல் மாதவரம் செங்குன்றம் சாலை, எருக்கங்சேரி ஆகிய பகுதிகளில் இயங்கி வந்த பெயிண்ட் நிரப்புக்கூடம் ஆகியவற்றில் நடத்தப்பட்ட சோதனையில் 19 போலி பெயிண்ட் நிரப்பப்பட்ட டப்பாக்கள், போலி பெயிண்ட் வில்லைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனையடுத்து சட்டவிரோதமாக பிரபல பெயிண்ட் நிறுவனத்தின் பெயரில் போலியாக பெயிண்ட் தயாரித்து விற்பனை செய்து வந்த சரவணன், பிரகாஷ், குமரேசன், சகாதேவ் ஆகிய 4 பேர் மீது சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :



















