தர்மஸ்தலா கோயிலில் நடந்த பாலியல் படுகொலைகள் - முன்னாள் ஊழியர் வெளியிட்ட பகீர் தகவல்கள்.

by Staff / 18-07-2025 10:45:27am
 தர்மஸ்தலா கோயிலில் நடந்த பாலியல் படுகொலைகள் - முன்னாள் ஊழியர் வெளியிட்ட பகீர் தகவல்கள்.

கர்நாடகா மாநிலம் தட்சின கன்னட மாவட்டம், தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதா கோவில் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் ரீதியில் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. இது பற்றி யாரும் புகார் அளிக்காததால் வழக்குப் பதிவு செய்யப்படாமல் இருந்தது

இந்நிலையில், 1995 முதல் 2014 வரை மஞ்சுநாதா கோவிலில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தார். தற்போது, தர்மஸ்தலா காவல் நிலையத்தில் அந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளார்

அப்புகாரில் தர்மஸ்தலாவில் பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், அவர்களின் உடலைப் புதைக்கவும் எரிக்கவும் தன்னை கட்டாயப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்

இவர் தர்மஸ்தலா கோவிலில் வேலை செய்யும் போது, நேத்ராவதி ஆற்றங்கரையைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சுத்தம் செய்யும் பணி செய்து வந்துள்ளார்

தொடக்கத்தில் அங்கு சில இறந்த உடல்களைப் பார்க்கும் போது தற்கொலை அல்லது தவறுதலாக விழுந்து இறந்திருப்பர் என நினைத்துள்ளார்

பெரும்பாலான பெண்களின் உடலில் ஆடை இன்றி இருந்ததுடன், வன்புணர்வு செய்யப்பட்டதற்கான காயங்களும் இருந்ததால் சந்தேகம் எழுந்த நிலையில், காவல் துறையிடம் புகார் அளிக்கலாம் எனத் தனது மேற்பார்வையாளரிடம் தூய்மைப்பணியாளர் கூறியுள்ளார்

மேற்பார்வையாளர், பிணங்களை ரகசியமாகப் புதைக்க அறிவுறுத்தியதுடன், தூய்மைப் பணியாளரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். மேலும் குடும்பத்துடன் கொலை செய்து விடுவோம் என மிரட்டி, இந்த காரியத்தைச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் காவல் துறையிடம் தூய்மைப் பணியாளர் தற்போது தெரிவித்துள்ளார்

இப்படி பள்ளி சீருடையிலிருந்த மாணவியைப் புதைத்தது, ஆசிட் ஊற்றப்பட்ட பெண்ணின் உடலை எரித்தது என்று பல தகவல்களை காவல் துறையிடம் தூய்மைப் பணியாளர் தெரிவித்துள்ளார்

மேற்பார்வையாளருக்குத் தெரிந்த நபரால் தனது குடும்பத்தை சேர்ந்த சிறுமி பாலியல் சீண்டலுக்கு உள்ளான நிலையில், 2014-ம் ஆண்டு தர்மஸ்தலாவில் இருந்து தப்பித்துப் பக்கத்து மாநிலத்தில், தலைமறைவாக வாழ்ந்து வந்ததாகத் தெரிவித்துள்ளார்

தனக்கு ஏற்பட்ட குற்ற உணர்ச்சியின் காரணமாக தற்போது காவல் துறையில் புகார் அளித்த தூய்மைப் பணியாளர், ரகசியமாக தர்மஸ்தலாவிற்கு சென்று தான் புதைத்த ஒரு உடலின் எச்சங்களைப் புகைப்படம் எடுத்துக் காவல் துறையிடம் கொடுத்துள்ளார்

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தான் தயாராக இருப்பதாகத் தெரிவித்த அவர், தனக்கும் தனது குடும்பத்திற்கும் காவல் துறை உரியப் பாதுகாப்பு அளித்தவுடன் இதில் சம்பந்தப்பட்டவர்களின் முழு விவரத்தைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்

 

Tags : Sexual assaults at Dharmasthala temple - shocking information revealed by a former employee.

Share via