வீடு புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய 4 பேர் மீது வழக்குப்பதிவு.

by Editor / 24-07-2025 01:23:21pm
வீடு புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய 4 பேர் மீது வழக்குப்பதிவு.

நெல்லை மாவட்டம், முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்த நிவன் மேத்யூ என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.அந்த புகாரில், தென்காசி மாவட்டம், இலஞ்சி அருகே உள்ள வாஞ்சிநகர் பகுதியில் ரூ. 19 லட்சத்திற்கு வடகரை பகுதியை சேர்ந்த பூமணி என்பவரிடம் வீடு ஒன்று விலைக்கு வாங்கியதாகவும், அந்த வீட்டில் எனது பாட்டி மற்றும் தாய்மாமா வசித்து வந்த நிலையில், அவர்கள் இருவரையும் பூமணி மற்றும் பூமணி உறவினரான அரசு பணியில் உள்ளவர் மற்றும் சிலர் தனது பாட்டி மற்றும் தாய்மாமாவை மிரட்டி அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும், தொடர்ந்து சில தினங்களுக்கு பிறகு அந்த வீட்டில் போடப்பட்டிருந்த பூட்டு மற்றும் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்களை தமிழக மக்கள் முன்னேற்ற கழக தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் கணேசன் உள்பட 4 நபர்கள் உடைத்து சேதப்படுத்தியதாகவும், மேலும், அவர்களால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரின்பேரில் குற்றாலம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சிசிடிவி காட்சிகளின் ஆதாரங்களை வைத்து தற்போது தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் கணேசன் மற்றும் இலஞ்சி பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வன், வள்ளியம்மாள்புரம் பகுதியை சேர்ந்த ராஜா, தென்காசி பகுதியை சேர்ந்த சௌந்தர்கண்ணன் உள்ளிட்ட 4 பேர் மீது குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories