மாணவ விடுதிகளின் பெயர் மாற்றம், சாதி ஒழிப்பில், ஓர் அறிவார்ந்த செயல்- மருத்துவர் கிருஷ்ணசாமி.

புதியதமிழகம் கட்சியின் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
மாநில அரசு சார்பாக நடத்தப்படும் ஆதிதிராவிடர், பிற்பட்டோர், சீர்மரபினர், கள்ளர் சீரமைப்பு மாணவ, மாணவியர் விடுதிகளுக்கு இருந்த சாதி ரீதியான அடையாளப் பெயர்களை நீக்கி, சமூக நீதி விடுதிகள் எனப் பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அண்மையில் அரசாணை பிறப்பித்தது. அதன்படி ஆதிதிராவிடர் மற்றும் பிற்பட்டோர் விடுதிகளின் பெயர்கள் மாற்றப்பட்டுவிட்டன. ஆனால், உசிலம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் செயல்பட்டு வந்த கள்ளர் பெயர் தாங்கிய விடுதிகளுக்கான சமூக நீதிப் பெயர் மாற்றத்தை எதிர்த்து, சில சமூக விரோதிகள் மாணவ விடுதிக்குள் புகுந்து, சமூக நீதிப் பெயர்ப் பலகையை உடைத்தெறிந்துவிட்டு, மீண்டும் 'கள்ளர்' சாதிப் பெயர்ப் பலகையை வைத்து அராஜகம் செய்துள்ளனர். இந்தச் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கதும், தண்டிக்கத்தக்கதும் ஆகும்.
இந்திய அரசியல் சாசனத்தின் உன்னத நோக்கமே, சாதி, உள்சாதி, மதம், இனம், மொழி ரீதியாக ஏற்பட்டுள்ள பிளவுகளை நீக்கி, அனைவரையும் இந்தியர்களாக அடையாளப்படுத்துவதுதான். அதற்காக எடுக்கப்படும் ஒவ்வொரு முற்போக்கு நடவடிக்கையும், மூர்க்கத்தனமான போக்கிரி கும்பல்களால், அச்சுறுத்தும் அரிவாள் கலாசாரத்தின் மூலம் தடுக்க முயற்சிக்கப்படுகிறது. தேசிய உணர்வோ, திராவிடமோ, தமிழோ, இந்து எனும் மதத்தைச் சார்ந்த ஒற்றை அடையாளமாக எதுவாயினும், அதை உள்ளிருந்தே உடைத்து, சாதியை மட்டுமே முன்னிறுத்தும் ஒரு குறிப்பிட்ட வன்முறைக் கும்பல் செய்யும் அச்சுறுத்தல்களுக்கு ஆட்பட்டு, ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமும் கடந்த பல ஆண்டுகளாகப் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. இதை நாம் அரை நூற்றாண்டுகளாக எச்சரித்து வருகிறோம்.
தமிழ்ச் சமூகத்தில் எல்லோரும் அரிவாள் தூக்குவதில்லை, வன்முறைப் பேச்சுக்கள் பேசுவதில்லை, சாதி வெறியோடு நடந்துகொள்வதில்லை. ஆனால், விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் அடாவடியால், ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமுதாயமும் பொதுவெளியில் அசிங்கப்பட்டு, அம்பலப்பட்டு நிற்கலாமா? அரிவாள் தூக்கி அச்சுறுத்தி, அனைத்து அதிகாரங்களையும் கைப்பற்ற நினைப்போருக்கு அடிபணியலாமா?
அறிவார்ந்த பொதுச்சமூகம் சாதியால் கட்டமைக்கப்படவில்லை. வள்ளுவமும், சிலப்பதிகாரமும், மணிமேகலையும் அடிப்படையாகக் கொண்டு, பொது ஒழுக்கத்தையும், பொதுத் தன்மையையும் முன்னிலைப்படுத்தியே கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்ச் சமூகத்தின் மேன்மையான விழுமியங்களை மறைத்து, மிருக வெறிப் பண்புகளைப் பொதுவுடைமையாக்க நினைப்போருக்கு மறைமுகமாக யாரேனும் உடந்தையாக இருந்துவிடக் கூடாது. அண்மையில் நடந்த இத்தகைய சாதி வெறிப் போக்குகள் தமிழகத்தை சர்வதேச அளவில் தரம் தாழ்த்திவிடும். எனவே, சாதி ரீதியான மிருக வெறி கொண்ட பிரிவினர்களுக்கு எதிராக, ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமுதாயமும் திரண்டு எழ வேண்டிய தருணம் இது.
மனிதநேயமற்ற கொலைகளைக் கண்டிப்பதற்குப் பதிலாக, சில கயவர்கள் அவற்றைக் கொண்டாடுகிறார்கள். இந்த மனிதநேயமற்ற செயலை பொதுச் சமூகம் எப்படிக் கண்டிக்காமல் இருக்கிறது எனத் தெரியவில்லை.
சாதிகளை ஒழிக்க, கலப்புத் திருமணத் தம்பதிகளுக்குத் தங்கப்பதக்கம் அறிவித்து, தனது முற்போக்குச் சிந்தனைகளை வெளிப்படுத்திய திராவிட இயக்கங்கள், அதில் கடைசிவரை உறுதியாக இல்லாமல் போனதும், அரசியலுக்காகவும், ஓட்டுக்காகவும் பிற்போக்கு வன்முறைக் கும்பல்களுக்கு ஆட்சியிலும் அதிகார வர்க்கத்திலும் பங்கு அளித்ததும், திராவிடக் கட்சிகளின் கொள்கைகள் நீர்த்துப் போக மிக முக்கியமான காரணங்கள் ஆகும். 'முதல் கோணல் முற்றிலும் கோணல்' என்பதற்கு இணங்க, சாதி ஒழிப்பு இயக்கத்திற்குள் சாதி வெறிக் கும்பல்களுக்கு இடம் அளித்ததுதான் இன்றைய தமிழகத்தின் ஒட்டுமொத்த அவல நிலைக்கும் காரணமாக அமைந்துவிட்டது.
இன்றைய திமுக அரசின் 2021 தேர்தல் வாக்குறுதிகளில் சாதி ஒழிப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். கடந்த நான்கு ஆண்டுகளில் திமுக அரசு சாதியை ஒழிக்க எத்தனையோ காரியங்களைச் செய்திருக்க முடியும். ஆட்சியின் கடைசி வருடத்திலாவது, இதுபோன்ற ஒரு நடவடிக்கையை எடுத்திடுங்கள். பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே வளர்ந்து வரும் சாதிய மோதலைத் தடுக்க, திமுக அரசே சரியான நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். எனினும், நீதியரசர் சந்துரு அவர்கள் தலைமையில் ஓர் ஆணையம் அமைத்து, அதன் ஆலோசனைகளை அமல்படுத்தும் நோக்கத்தில் தற்போது மாணவ, மாணவியர்களுக்கான விடுதிகளில் இருந்த சாதிப் பெயர்களை நீக்கி, சமூக நீதி மாணவர் விடுதி என மாற்றம் செய்திருக்கிறார்கள்.
சாதி ஒழிப்பில் இது ஓர் அறிவார்ந்த செயல். இதைக்கூட ஏற்காமல், உசிலம்பட்டியில் கள்ளர் சீரமைப்பு மாணவர் விடுதியின் சமூக நீதி எனும் பெயர் மாற்றத்தை எதிர்த்து கலவரத்தில் ஈடுபடுகிறார்கள். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பள்ளிச் சொத்தை சேதப்படுத்திய அனைவர் மீதும் பிணையில் வர முடியாத வழக்குகளைப் பதிவு செய்து, சிறையில் அடைக்க வேண்டும். அரசு சாதி ஒழிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex. MLA,
நிறுவனர் - தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
03.08.2025
Tags : மருத்துவர் கிருஷ்ணசாமி