பாஜக கூட்டணியில் மீண்டும் ஓபிஎஸ் பேச்சுவார்த்தை..?

நெல்லை: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் அதிமுக - பாஜக கூட்டணி ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் ஆகியோர் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தமிழக பாஜக தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். தேர்தல் யுக்திகள், பரப்புரை வியூகம் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கூட்டணி குறித்து தக்க நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்பதால் கூட்டணி தொடர்பாக தொண்டர்களும், நிர்வாகிகளும் கருத்து தெரிவிக்க வேண்டாம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற அணியை நடத்தி வரும் ஓ.பன்னீர்செல்வம், தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் செய்தி தொடர்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கூட்டணி குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கூட்டணி குறித்து தக்க நேரத்தில் முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
NDA கூட்டணியிலிருந்து விலகிய ஓபிஎஸ்-ஐ மீண்டும் கூட்டணியில் இணைப்பது குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. கூட்டணியில் இல்லாவிட்டால் அவர் சார்ந்த வாக்குகள் பிரியும் என்பதால் அவரை மீண்டும் கூட்டணியில் இணைப்பதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Tags : பாஜக கூட்டணியில் மீண்டும் ஓபிஎஸ் பேச்சுவார்த்தை..?