தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு முதலமைச்சர் -அன்புமணி ராமதாஸ்.

by Staff / 01-09-2025 12:05:59am
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு முதலமைச்சர் -அன்புமணி ராமதாஸ்.

உரிமை மீட்க தலைமுறையை காக்க நடைபயணம் தமிழகம் முழுக்க மேற்கொண்டு வரும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திருவண்ணாமலை அடுத்த கீரனூர் கிராமத்தில் உள்ள நந்தன் கால்வாய் திட்டப் பணிகள் குறித்து நேரில் ஆய்வுகள் மேற்கொண்டு விவசாயப் பிரதிநிதிகள் மற்றும் நந்தன் கால்வாய் சுற்றியுள்ள சம்பந்தனூர், பள்ளிகொண்டாப்பட்டு,தேவனந்தல், கோணலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த கிராம மக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.

தமிழக அரசு நந்தன் கால்வாயை முறைப்படுத்தப்பட்ட பாசன கால்வாயாக அறிவிக்க வேண்டும்,பாலாறு தென்பெண்ணை ஆற்றை இணைக்க வேண்டும், நந்தன்கால்வாயை முழுமையாக சீரமைக்க வேண்டும்.

ஓலையாரிலிருந்து வரும் கழிவு நீரை மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாய சங்க பிரதிநிதிகள் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸிடம் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் கிராம மக்கள் இடம் சிறப்புரை ஆற்றிய அன்புமணி ராமதாஸ்.

தமிழ்நாட்டில் 20 நீர்ப்பாசன திட்டங்கள் உள்ளதாகவும், அதில் 90 ஆண்டு காலமாக நந்தன் கால்வாய் திட்டம் முறைப்படுத்தாமல் நிறைவேற்ற முடியாமல் உள்ளதாகவும் கூறியவர் இத்திட்டம் மற்ற திட்டங்களை ஒப்பிடும் பொழுது மிகச் சாதாரணமான சிறிய திட்டம் என்றும் கூறினார்.

காவிரி - குண்டாறு திட்டத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் சூழலில் இதனால் இரண்டரை கோடி மக்கள் பயன்பெறுவார்கள் என்றும் ஆனால் சிறிய திட்டமான தென்பெண்ணை ஆற்றில் இருந்து வரக்கூடிய நந்தன் கால்வாய் திட்டம் ஆட்சியாளர்கள் செயல்படுத்தாமல் இருப்பது வேதனை அளிப்பதாகவும் கூறினார்.

நந்தன் கால்வாய் திட்டத்தால் திருவண்ணாமலை விழுப்புரம் மாவட்டத்தில் 36 ஏரிகள் நேரடியாக பயன்பெறுவதாகவும், மறைமுகமாக 50க்கும் மேற்பட்ட ஏரிகள் பயன்பெறுவதுடன் 6500 ஏக்கர் பாசனம் பெருகும் என்றும் 25 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் என்றும் இதனால் இரு மாவட்டத்தின் நிலத்தடி நீர் உயரும் என்று கூறியவர் கீரனூர் ஏரியில் தடுப்பணையை கட்டியது வெள்ளைக்காரர்கள் என்றும் கூறினார்.

பெங்களூரில் இருந்து வரக்கூடிய அனைத்து கழிவுகளும் கெலவரப்பள்ளி அணையில் குறிப்பாக ரசாயன கழிவு திடக்கழிவு தொழில் கழிவு என அனைத்து கழிவுகளும் கெலவரப்பள்ளி அணையில் கலந்து கேஆர்பி அணைக்கு வருவதை சுட்டி காட்டியவர் தமிழ்நாட்டில் உள்ள எட்டு கோடி மக்களில் 80 லட்சம் மக்கள் பயன்படக்கூடிய இந்த சிறிய திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறினார்.

அத்திக்கடவு அவிநாசி திட்டம் தற்பொழுது அரைகுறையாக நிறைவேற்றியுள்ளதாகவும், இதற்காக தான் பல்வேறு போராட்டங்களையும் துண்டு பிரசுரங்களையும் வழங்கியதாகவும் கூறினார். 

தர்மபுரி மாவட்டத்தில் ஐந்து முறை எம்எல்ஏவாகவும் 15 ஆண்டுகள் அமைச்சராகவும் இருந்து வந்த கே பி அன்பழகன் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தாமல் இருந்ததாகவும் தான் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினராக சென்ற பிறகு பல்வேறு திட்டங்கள் அப்பகுதிக்கு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

ஏரி குளம் இயற்கை ஆறு உள்ளிட்டவைகளை பாதுகாக்க ஆட்சியாளர்களுக்கு மனம் இல்லை என்றும் ஆனால் தனக்கு அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த மனதும் திட்டமும் தைரியமும் உள்ளது என்றும் ஆனால் அதிகாரம் மட்டும் இல்லை என்று கூறியவர் மக்கள் அந்த அதிகாரத்தை தனக்கு வழங்க வேண்டும் என கூறினார்.

தன்னிடம் அதிகாரம் இருந்தால் மூன்றே மாதங்களில் நந்தன் கால்வாய் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்றும் கூறியவர் இத்திட்டத்திற்கு 400 முதல் 500 கோடி பணம் ஒதுக்கினால் போதும் என்றும் கூறினார்.

தமிழ்நாடு முதல்வர் நந்தன் கால்வாய் திட்டத்திற்காக 34 கோடி ஒதுக்கிய நிலையில் இவர் அறிவிப்பு முதல்வர் என்றும் பணம் திட்டத்திற்கு வராது என்றும் மனது வராது அறிவிப்பு மட்டுமே வரும் என்றும் கூறினார்.

 

Tags : தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு முதலமைச்சர் என அன்புமணி ராமதாஸ் .

Share via

More stories