குழந்தையை அடித்து கொடுமைப்படுத்திய வீடியோ: தாய் கைது

by Admin / 30-08-2021 01:16:09pm
குழந்தையை அடித்து கொடுமைப்படுத்திய வீடியோ: தாய் கைது



விழுப்புரம் செஞ்சி அருகே பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கிய துளசி என்ற பெண்ணை, ஆந்திராவில் வைத்து தமிழக போலீசார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் மணலப்பாடியை அடுத்த மோட்டூர் கிராமத்தை சேர்ந்த வடிவழகன், ஆந்திர மாநிலம் ராம்பள்ளியை சேர்ந்த துளசியை கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார்.

 குடும்பத்துடன் சென்னையில் தங்கி பணியாற்றி வந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் சொந்த ஊர் திரும்பினர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை ஆந்திராவில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு வடிவழகன் அனுப்பி விட்டார்.

 இந்நிலையில், தமது 2 வயது குழந்தையை துளசி கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சி, வாட்ஸ்அப்பில் வைரலாக பரவியது. இதனை பார்த்த பலர் அதிர்ச்சி அடைந்தனர்.

தவறான நடத்தையால் குழந்தையை தாக்கி தாய் வீடியோ எடுத்ததாக, குழந்தையின் தந்தை தரப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தமிழக போலீசார், தனிப்படை அமைத்து ஆந்திரா விரைந்தனர்.

 சித்தூர் மாவட்டம் ராம்பள்ளி கிராமத்தில் தமது தாய் வீட்டில் பதுங்கியிருந்த துளசியை அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, செஞ்சி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு பின்பு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு துளசியை கொண்டு சென்றுள்ளனர். மனநல மருத்துவர் பரிசோதனை செய்வதற்காக செஞ்சியில் மருத்துவர் இல்லாததால் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

 மன நல மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு துளசி சிறையில் அடைக்கப்படுவார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 முன்னதாக பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சென்னையை சேர்ந்த கள்ளக்காதலன் பிரேம்குமார் பிடிக்க சென்னைக்கு கார்த்திக் உதவி ஆய்வாளர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட தனிப்படை போலீசார் சென்னை விரைந்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo