ஒரு நபர் ஆணையம் விசாரணையில் அனைத்து உண்மையும் வரும்-செந்தில் பாலாஜி.

கரூரில் கடந்த 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மொத்தம் 41 பேர் பலியாகியுள்ளனர். இது தொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில், நேற்று (30ஆம் தேதி) இது தொடர்பாக வீடியோ வெளியிட்ட தவெக தலைவர் விஜய், “ஐந்து மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டேன். ஆனால், கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது?” என சந்தேகம் எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், கரூர் திமுக எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி இன்று கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “கரூர் சம்பவத்தை நான் அரசியலாக பார்க்கவில்லை. இறந்த 41 நபர்களில் 27 குடும்பத்தைச் சேர்ந்த 31 நபர்கள் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு வகையிலும் நான் அந்தக் குடும்பங்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டவன்.
நேற்று இதில் உயிரிழந்த ஒரு இளைஞரின் இல்லத்திற்கு இரங்கல் தெரிவிக்கச் சென்றிருந்தோம். ஞாயிற்றுக்கிழமை பெண் பார்க்க செல்ல வேண்டிய இளைஞர், சனிக்கிழமை அங்கு சென்றிருக்கிறார். அவருக்கு டிசம்பர் மாதம் திருமணம் முடிக்க இருந்தனர். அவர் குடும்பத்தினர் ஒரு தேவைக்காக என்னை சந்தித்துள்ளனர். அவர்களுக்கு அதனை நான் செய்தும் கொடுத்திருக்கிறேன்.
அந்த இளைஞர் கரூரில் நடந்த முப்பெரும் விழாவிலும் பங்கேற்றிருக்கிறார். அவர் வேடிக்கை பார்க்கத்தான் அங்கு சென்றதாக அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் எங்களிடத்தில் தெரிவித்தனர். எனவே இதில் அரசியலாக பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை. வரும் நாளில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.நான் இதனை குறைகளாக சொல்லவில்லை. ஆனால், கரூர் வேலுசாமிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை சுமார் 1000 செருப்புகள் இருந்தன. ஆனால், ஒரு காலி தண்ணீர் பாட்டில் கூட கீழே இல்லை. நாங்கள் நடத்திய முப்பெரும் விழா உட்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் கூட்டத்திற்கு வருபவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்கிறோம். கூட்டம் நடத்தும் அரசியல் கட்சிகள் தான் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரவேண்டும்.
நான் விசாரித்தவரை மாலை 4 மணிக்கு சுமார் 5,000 பேர்தான் இருந்ததாக சொன்னார்கள். அவர் 12 மணிக்கு பேசுவதாக அவரது கட்சி பொதுச் செயலாளர் பேட்டி கொடுத்தார். சொன்ன நேரத்தில் நிகழ்ச்சி நடந்திருந்தால் இந்தச் சம்பவம் நடந்திருக்காது.
அத்தனை ஆயிரம் நபர்கள் இருந்த இடத்தில் யாரோ சிலர் உள்ளே சென்று ஜெனரேட்டரை ஆஃப் செய்ய முடியுமா? அங்கு கூட்டம் தாங்காமல் ஜெனரேட்டர் இருந்த இடத்திற்கு சென்று, ஜெனரேட்டர் ஆஃப் செய்யப்படுகிறது. அப்போது கூட தெருவிளக்கு எரிகிறது. அதாவது மின் துண்டிப்பு நடக்கவில்லை.அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வாகனத்தின் முன் இருக்கையில் அமர்வார்கள். கூட்டம் அதிகமாக இருந்தால் மேலே வந்து கை காட்டுவார்கள். ஆனால், இந்த வண்டியில் சுமார் 500 மீட்டர் முன்பே வாகனத்திற்குள் சென்றுவிட்டார். லைட் ஆஃப் செய்யப்பட்டு, ஸ்க்ரீன் போட்டுவிட்டனர். அதேபோல், கூட்டம் அதிகமாக இருக்கிறது என கூறி சற்று முன்பே பேசும்படி காவல்துறை அறிவுறுத்தியும் அங்கிருந்தவர்கள் கேட்கவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளனர்.
என் பெயரைச் சொல்லி பாட்டு பாடும்போது தான் செருப்பு வந்ததாக தகவல் சொல்கிறார்கள். அவர் அந்த வாகனத்தின் மீது இருந்தது மொத்தம் 19 நிமிடம். அதில் அவர் 3.3 நிமிடத்தில் இருந்து 3.31 நிமிடம் வரை என்னை பற்றி பேசிவிட்டு பிறகு பேசுவதாக சொல்லிவிட்டு தேர்தல் வாக்குறுதி பற்றி பேசுகிறார். பின்னர் 5.33வது நிமிடத்தில் கரூர் விமானநிலையம் குறித்து பேசுகிறார். அதன்பின் 6வது நிமிடத்தில் முதலில் மயங்கிவிழுந்த நபர் பகுதி இருந்த இடத்தில் இருந்து முதல் செருப்பு வீசப்படுகிறது. 6.40 நிமிடத்தில் இரண்டாவதாக ஒரு செருப்பு வீசப்படுகிறது.
7.12 நிமிடத்தில் அந்தக் கட்சித் தலைவருடன் வந்த உதவியாளர், ‘நிறைய நபர்கள் மயக்கம் அடைகிறார்கள்’ என அவருக்கு சொல்கிறார். இது அனைத்தும் நேரலையில் நீங்கள் பார்த்தீர்கள். அதன்பிறகு தான் ஆம்புலன்ஸ்கள் வருகின்றன. மீண்டும் 14 நிமிடத்தில் பாதுகாவலர் சென்று மயக்கம் அடைந்துவிழுவதை அவருக்கு சொல்கிறார். மீண்டும் என்னைப் பற்றி 16வது நிமிடத்தில் தான் பேசுகிறார். ஆனால், வண்டியில் ஏறி ஐந்தாவது நிமிடத்திலே இந்தச் சம்பவங்கள் நடந்துவிடுகின்றன.
ஆனால், எந்த விவரமும் தெரியாமல் தவறை ஒப்புக்கொள்ளாமல் அல்லது தவறை சரி செய்ய முயற்சி எடுக்காமல், இவை எல்லாவற்றுக்கும் அரசுத்தான் காரணம் என திருப்பிவிட வேண்டும் என சமூகவலைதளங்களில் ஒரு சாரார் பரப்பிவருகின்றனர்.
நான் எப்படி உடனே மருத்துவமனைக்குச் சென்றேன் என கேள்வி எழுப்புகிறார்கள். அந்தச் சமயத்தில் கட்சி நிர்வாகிகளுடன் அலுவலகத்தில்தான் இருந்தேன். தகவல் சொன்னதும் அமராவதி மருத்துவமனைக்குச் சென்றேன். அலுவலகத்தில் இருந்து மருத்துவமனை எவ்வளவு நேரத்தில் போகமுடியும் என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல், அதிமுக மாவட்டச் செயலாளர் அரசு மருத்துவமனைக்கு சென்றார். நான் பாதிக்கப்பட்டவர்களை பார்க்காமல், சென்னைக்கு டிக்கெட் போட்டு யாருக்கும் பதில் சொல்லாமல், உதவி செய்யாமல் சென்றுவிடட்டுமா?
நேற்று பேசும்போது கட்டுக்கடங்காத கூட்டமா என்றார். அது கட்டுக்கடங்காத கூட்டம் அல்ல, கட்டுப்பாடு அற்ற கூட்டம். அரசு செய்ய வேண்டிய கடமையை சரியான முறையில் செய்திருக்கிறது. அரசியல் இயக்கம் செய்ய வேண்டியதை அந்தக் கூட்டத்தில் முழுமையாக செய்யவில்லை.
பாஜக உண்மை கண்டறியும் குழு, மணிப்பூர், கும்பமேளா, குஜராத் பாலம் விபத்து ஆகிய இடங்களுக்கும் சென்றிருந்தால் அது ஏற்புடையதாக இருக்கும். ஆனால், கரூருக்கு மட்டும் உண்மை கண்டறியும் குழு வந்துள்ளது. ஒரு நபர் ஆணையம் விசாரணையில் அனைத்து உண்மையும் வரும்” என விளக்கம் கொடுத்து பேசினார்.
Tags : ஒரு நபர் ஆணையம் விசாரணையில் அனைத்து உண்மையும் வரும்-செந்தில் பாலாஜி