குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 விரைவில் வழங்கப்படும் அமைச்சர் கே.என்.நேரு

by Editor / 10-10-2021 04:32:58pm
குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 விரைவில் வழங்கப்படும் அமைச்சர் கே.என்.நேரு

குடும்ப தலைவிக்கு விரைவில் ரூ.1,000 வழங்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு குடும்ப தலைவிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து தேர்தலில் தி.மு.க.அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. முதல்முறையாக மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் நலத்திட்டங்களையும், தேர்தல் வாக்குறுதிகளையும் படிப்படியாக நிறைவேற்றி வந்தது.

ஆனால் குடும்ப தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை நிதி நெருக்கடி காரணமாக செயல்படுத்தாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் தி.மு.க. தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அண்ணா தி.மு.க., பாரதீய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. தி.மு.க. தேர்தலுக்காக கொடுத்த வெற்று வாக்குறுதி இது என்றும் விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொளத்தூர் தொகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தேர்தல் நேரத்தில் பல உறுதிமொழிகளை சொல்லியிருக்கிறோம். பெண்கள் முன்னேற்றத்திற்காக இந்த ஆட்சி உறுதியுடன் பணியாற்றும். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் திருச்சியில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும். இது தொடர்பான அறிவிப்பை முதல்வர் முறைப்படி அறிவிப்பார் என்றார்.

மேலும் உள்ளாட்சி தேர்தல் குறித்து பேசிய அமைச்சர், “அண்ணா தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தலை சரியான முறையில் நடத்தினார்களா? தற்போது நடைபெற்றதை விட நேர்மையாக தேர்தலை நடத்த முடியாது” என்று கூறினார்.

 

Tags :

Share via