நாள் ஒன்றுக்கு 1000 மூட்டை நெல் கொள்முதல் செய்ய அமைச்சர் சக்கரபாணி உத்தரவு
சக்கரபாணி தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டத்திற்கு உட்பட்ட கச்சனம் பகுதியிலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சேமிப்பு கிடங்கினை உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தார். திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் மற்றும் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து முன்னிலை வகித்தனர்.
பின்னர் அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்ததாவது:
முதலமைச்சர் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படையில் தமிழக அரசு விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்து தனியார் அரிசி ஆலைகளுக்கும், தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலமாக இயங்கும் 21 ஆலைகளுக்கும் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
உடனடியாக பணம்
அதனடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலமாக 2 ஆலைகளும், 24 தனியார் ஆலைகளும் செயல்பட்டு வருகிறது. நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து இன்று ஆய்வு செய்யப்பட்டது. முதலமைச்சர் பொறுப்பேற்றதிலிருந்து விவசாயிகளிடமிருந்து நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு உரிய பணத்தை உடனடியாக அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில் 5 ம் தேதி வரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ள அனைத்து நெல் மூட்டைகளுக்கும் பணம் வழங்கப்பட்டுள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ஏற்கனவே ரூபாய் 1958 வழங்கப்பட்டிருந்தது அதனை ஊக்கத்தொகை உட்பட 2060 ரூபாயாகவும், இதேபோன்று புது ரக நெல்லுக்கு 1918 ரூபாயாக இருந்ததை ஊக்கத்தொகை உட்பட 2015 ரூபாயாகவும் உயர்த்தி விவசாயிகளுக்கு வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
ஒரு நாளைக்கு
1000 மூட்டை கொள்முதல்
மேலும், திருவாரூர் மாவட்டத்தில் 265 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களில் குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 1000 மூட்டைகள் வரை கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 2020 -2021 பருவத்தில் 8,56,406 டன்னும், 2021- 2022 பருவத்தில் 19,500 டன் நெல் அளவு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் எங்கெல்லாம் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என்று கூறுகிறார்களோ அந்த இடத்தில் உடனடியாக கொள்முதல் நிலையங்களை திறக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் பங்களிப்புடன் நவீன அரிசி ஆலை உருவாக்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக அரசு நெல் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கப்பட்டதோடு உரிய நேரத்தில் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு பணம் உடனடியாக வழங்கப்படுவதால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நெல் உற்பத்தி கூடுதலாகும்.
இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
முன்னதாக திருவாரூர் மாவட்டம், வண்டாம்பாளையம் பகுதியில் புதிய தற்காலிக நெல் சேமிப்பு கிடங்கு அமைப்பதற்கான இடத்தினையும், அதனை தொடர்ந்து திருவாரூர் நவீன அரிசி ஆலையினையும் அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Tags :