தூத்துக்குடி :பள்ளி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு பரபரப்பு.

by Staff / 02-11-2025 05:00:40pm
தூத்துக்குடி :பள்ளி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு பரபரப்பு.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  ஆலந்தா ஊராட்சி சவலாப்பேரியில் உள்ள அரசு  மேல்நிலைப் பள்ளியில் சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் ஓட்டப்பிடாரம் அருகே சவலாப்பேரி  அரசு மேல்நிலைப்பள்ளி அருகே இரு பெட்ரோல் குண்டு  வீசியது தொடர்பாக புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ,
தூத்துக்குடி வாகைகுளம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் காளான் வளர்ப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது. இந்த கருத்தரங்கத்தில் சவலாப்பேரி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும், வல்லநாடு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் பங்கேற்றுள்ளனர். அப்போது மதிய உணவு இடைவேளையின் போது வல்லநாடு மேல்நிலைப்பள்ளி சேர்ந்த மாணவர்கள், சவலாபேரி மாணவர்களை பார்த்து சவலா, சவலா என நக்கலாக கேலி செய்துள்ளனர். அப்போது  மாணவர்கள் இடையே தகராறு ஏற்பட்டு இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ஆசிரியர்கள் தடுத்து சத்தம் போட்டதை அடுத்து இரு பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் கலைந்து சென்றுள்ளனர். இதையடுத்து இரு பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் வாகைகுளம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்துள்ளனர் .

மேலும் இச்சம்பவம் தொடர்பாக சவலாப்பேரி  பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது கிராமத்தில் உள்ள நபர்களிடம் செல்போனில் இது குறித்து தெரிவித்துள்ளனர்.  அப்போது   ஒரே பைக்கில் சென்ற நான்கு பேர் வாகைகுளம் பேருந்து நிறுத்தத்திற்கு சென்று சவலப்பேரி பள்ளி மாணவர்களிடம் உங்களை தாக்கியது யார் என கேட்டு அடையாளம் தெரிந்து கொண்டு  அங்கு பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்த வல்லநாடு பகுதியைச் சேர்ந்த மாணவர்களை தாக்க முற்பட்டபோது மாணவர்கள் தப்பி ஓடி விட்டனர். மாணவர்கள் தப்பி ஓடி விட்டதால் ஆத்திரமடைந்த நான்கு பேரில் மூன்று பேர்  நமது பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்களை வேறொரு பள்ளி மாணவர்களிடம் அடிவாங்கி கொடுத்துவிட்டு பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி   சவலாப்பேரி அரசு மேல்நிலைப்பள்ளி முன்பாக உள்ள சிறிய சுவரில் இரு பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் புளியம்பட்டி போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பள்ளி அருகே பெட்ரோல் குண்டு வீசிய மூன்று நபர்களையும் வலை வீசி தேடி வருகின்றனர். பள்ளி அருகே பெட்ரோல் குண்டு வீசியது அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது

 

Tags : தூத்துக்குடி :பள்ளி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு பரபரப்பு.

Share via