இந்து முன்னணியினர் பிரார்த்தனை போராட்டம்

by Editor / 03-09-2021 12:50:59pm
இந்து முன்னணியினர் பிரார்த்தனை போராட்டம்

 

தமிழகத்தில் கரோனா பரவும் அச்சம் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், விநாயகர் சிலை ஊர்வலத்துக்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இத்தடையை நீக்கக் கோரி ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்ட இந்து முன்னணி தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். இதில் பாஜக மாவட்டச் செயலாளர் முரளிதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராம நாதபுரம் வழிவிடு முருகன் கோயில், தங்கச்சிமடம் முருகன் கோயில், பாம்பன் முனியசாமி கோயில், மண்டபம் சந்தனமாரியம்மன் கோயில், உச்சிப்புளி சந்தன மாரியம்மன் கோயில், ரெகுநாத புரம் முத்துநாச்சியம்மன் கோயில், வண்ணாங்குண்டு விநாயகர் கோயில், பரமக்குடி வீரமாகாளியம்மன் கோயில், எமனேசுவரம் எமனேசுவர முடையார் கோயில், நயினார் கோயில் நாகநாதர் கோயில் உட்பட 22 கோயில்களில் பிரார்த்தனை போராட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் முன் இந்து முன்னணி கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜா தலைமையில் போராட்டம் நடந்தது. அபிராமி அம்மன் கோயில் முன் நடந்த போராட்டத்தில் கோட்டச் செயலாளர் சங்கர்கணேஷ், மாவட்டச் செயலாளர் சஞ்சீவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆண்டிபட்டியில் மீனாட்சி அம்மன் கோயில் முன் இந்து முன்னணியினர்ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்டச் செயலாளர் செல்வம் தலைமை வகித்தார்.

ராஜபாளையத்தில் சொக்கர் -மீனாட்சி அம்மன் கோயில் முன் கூட்டு வழிபாடு செய்தனர். இதற்கு இந்து முன்னணி நகர தலைவர் சஞ்சீவி தலைமை வகித்தார். இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மதுரையில் மீனாட்சியம்மன் கோயில், தெப்பக்குளம் மாரியம்மன் கோயில், முக்தீஸ்வரர் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் உட்பட 25 கோயில்கள் முன் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

Tags :

Share via