இரவு உணவு தாமதமானால் உடல் எடை அதிகரிக்குமா?

by Editor / 06-09-2021 09:36:41pm
இரவு உணவு தாமதமானால் உடல் எடை அதிகரிக்குமா?

காலை உணவினை அரசனை போலவும் , மதிய உணவினை இளவரசரைப்போலவும் , இரவு உணவினை ஏழையை போலவும் சாப்பிட வேண்டும் என்பது உணவுமுறையை எடுத்துரைக்கும் வாழ்வியல் கூற்றாகும் .

3 வேளை உணவையும் , எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பது போல எந்தெந்த நேரத்திற்குள் சாப்பிட வேண்டும் என்பதும் முக்கியமானது . இதில் இரவு உணவை பொறுத்தவரை 7 முதல் 9 மணிக்குள் சாப்பிடுவதே சிறந்தது .

ஆனால் இன்றைக்கு பணி நிமித்தமாக நாள் முழுவதும் ஓடிக்கொண்டே இருப்பவர்களுக்கு , இரவு உணவை குறிப்பிட்ட நேரத்திற்குள் குறிப்பிட்ட அளவிலும் சாப்பிட முடிவதில்லை என்பதே உண்மை .

முறையற்ற நேரத்தில் பேரரசரைப்போலவே நம்மில் பலர் இரவு உணவை சாப்பிடுகிறோம் என்பதை பல்வேறு ஆய்வு முடிவுகள் முன் வைக்கின்றன . இந்த தலைகீழான நிலையால் ஏராளமான உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன .

சாப்பிட்ட உடனேயே உறங்கச் செல்வோருக்கு இரைப்பையில் செரிமானத்திற்காக சுரக்கும் அமிலம் இரைப்பை குடலை நோக்கி மேலே ஏறுகிறது . இவ்வாறு தொடர்ந்து நடப்பதால் குடல் பகுதியில் புண்கள் உண்டாகின்றன . காலை நேரத்தில் நெஞ்செரிச்சல் ஏற்பட இதுவும் ஒரு காரணமாகும் .

துரித உணவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு தற்போது பரவலாக உள்ளது . அவற்றை போல எண்ணெய்யில் பொரித்த உணவுகளும் இரவுக்கு ஏற்றவை அல்ல . அவை செரிமானமாக அதிக நேரம் எடுப்பதால் நம்முடைய ஓய்வுக்கு மிகவும் தேவையான ஆழ்ந்த உறக்கத்தை கெடுக்கும் தன்மை கொண்டவை .

முடிந்தவரை இரவு நேரத்தில் அசைவ உணவுகளை தவிர்த்துவிடுவது நல்லது . அவை செரிமானம் ஆக நீண்ட நேரமாகும் .

தயிர் , கீரை வகைகள் சார்ந்த உணவுகளை இரவில் தவிர்த்து விடுவதால் சில ஒவ்வாமைகளில் இருந்து தப்பிக்கலாம் . அவற்றிற்கு மாற்றாக காய்கறிகள் அடங்கிய சூப் வகைகள் , மிளகு , மஞ்சள் கலந்த பால் ஆகியவற்றை பருகலாம் .

இவையெல்லாம் இரவு உணவில் கடைப் பிடிக்க வேண்டிய எளிய வழிமுறைகளாகும் . இவற்றில் சற்றே கவனமாக இருந்தால் செரிமான மண்டலம் நிம்மதி அடையும் . ஏனெனில் நாம் உறங்கி இளைப்பாறும் நேரத்தில் தான் செரிமான உறுப்புகளும் ஓய்வெடுக்கும் . முறையற்ற இரவு உணவால் அதற்கு வாய்ப்பளிக்காவிட்டால் உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் .

 

Tags :

Share via