ஜெகன்- பாஜக. கடும் மோதல்

by Editor / 07-09-2021 10:10:59am
ஜெகன்- பாஜக. கடும் மோதல்

ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பாஜக கூட்டணியில் இல்லை என்றாலும் தீவிரமாக பாஜக எதிர்ப்பை கடைபிடிக்காத நபர். எதிர்க்கட்சி முதல்வர்கள் பலர் தேசிய அளவில் ஒன்று திரண்ட சமயங்களில் எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டி மட்டும் கொஞ்சம் தனித்தே இருந்து இருக்கிறார். வெளிப்படையாக பாஜகவை மம்தா பானர்ஜி போலவோ ஸ்டாலின் போலவோ ஜெகன் மோகன் ரெட்டி எதிர்த்தது கிடையாது.முடிந்த அளவு இரண்டு பக்கத்திற்கும் ஆதரவு அளிக்கும் வகையிலேயே ஜெகன் மோகன் ரெட்டி செயல்பட்டு இருக்கிறார். பாஜக ஆதரவும் கிடையாது, எதிர்ப்பும் கிடையாது என்ற நிலையில் இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டி அவ்வப்போது பிரதமர் மோடியை சந்தித்து நட்பாக பேசியும் இருக்கிறார். பாஜகவும் இத்தனை நாள் இவரை நேரடியாக தாக்கி பேசியது கிடையாது. ஆனால் அப்படிப்பட்ட ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் ஆந்திர பாஜகவிற்கும் இடையில் தற்போது கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஸ்டைலில் ஜெகன் மோகன் ரெட்டி விடுத்த அறிக்கை ஒன்றால்தான் இந்த மோதலே ஏற்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், கடந்த வாரம் தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டார். பொது இடங்களில் சிலை வைக்கவும், ஊர்வலமாக சென்று விழா நடத்தவும், கடலில் சிலைகளை கரைக்கவும் தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டது. வீட்டில் மட்டுமே பூஜை செய்ய அனுமதிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக மக்கள் வெளியே கூடுவதை தவிர்க்கும் விதமாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசின் முடிவை தமிழ்நாடு பாஜக கடுமையாக எதிர்த்தது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தே தீரும். இந்து பண்டிகளுக்கு எதிராக திமுக செயல்படுகிறது. டாஸ்மாக் கடைகள் எல்லாம் இயங்குகிறது. விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தடை விதிக்கும் அரசு, எதற்காக டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும்?. அங்கு மட்டும் கொரோனா பரவாதா? விநாயகர்தான் திமுகவின் ஆட்சிக்கு முடிவு கட்ட போகிறார். விநாயகர் சிலை ஊர்வலத்தில் கை வைத்தால் திமுகவின் ஆட்சி கலையும். எந்த அரசு தடுத்தாலும் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தே தீரும் என்று அண்ணாமலை குறிப்பிட்டார்.தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் காரணமாக பாஜக - திமுக இடையில் எப்படி மோதல் ஏற்பட்டு இருக்கிறதோ அதே போன்ற மோதல்தான் தற்போது ஆந்திர பிரதேசத்திலும் ஏற்பட்டுள்ளது

 

Tags :

Share via