ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நல ஆணையம் உருவாக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

by Admin / 08-09-2021 07:08:44pm
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நல ஆணையம் உருவாக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

 


தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நல ஆணையம் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் 2021-2022 ஆம் ஆண்டிற்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது, சட்டப்பேரவை விதி 110ன் கீழ் முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான உரிமைகளை பாதுகாக்கவும், பிரச்னைகளை தீர்க்கவும் இந்தியாவிலேயே முதல்முறையாக மாநில அளவில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான நல ஆணையம் உருவாக்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும் இந்த ஆணையம் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும். இதற்கான சட்ட முன்வடிவு இந்த கூட்டத்தொடரிலேயே கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் உள்ள பள்ளிகளை மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை வழங்கும். ஆனால், நிர்வாகத்தில் பள்ளிக்கல்வித்துறை தலையிடாது.

 அந்த பள்ளிகள் தொடர்ந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும். அந்த பள்ளிகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கப்படும்.

வன்கொடுமை தடுப்புச் சட்டங்களை விசாரிக்க சேலம், மதுரை, நெல்லை, கிருஷ்ணகிரி ஆகிய நகரங்களில் 4 புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

 

Tags :

Share via