ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து ரூ.2120.54 கோடியில் 24 நிறுவனங்கள் முதலீடு

by Editor / 22-09-2021 04:13:50pm
ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து ரூ.2120.54 கோடியில் 24 நிறுவனங்கள் முதலீடு


உலகம் முழுவதும் தமிழகத்தில் உற்பத்தி செய்த பொருட்களை கொண்டு செல்வோம்; ஏற்றுமதியில் ஏற்றம் காண்போம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்..


சென்னையில்2 ஆயிரத்து 120 கோடியே 54 லட்சம் முதலீட்டில் 24 தொழில் நிறுவனங்கள் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.‘‘ஏற்றுமதியில் ஏற்றம் முன்னணியில் தமிழ்நாடு’’ என்ற ஏற்றுமதி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது:


‘ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு’ என்ற தலைப்பில் நடைபெறும் தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டில் கலந்துகொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஏற்றுமதியில் ஏற்றம் பெற்று இந்தியாவின் முன்னணி இடத்தை நோக்கி, தமிழ்நாடு செல்லத் தொடங்கியிருக்கும் நேரத்தில் இந்த மாநாடு நடைபெறுவது மகிழ்ச்சிக்குரியதாக அமைந்து இருக்கிறது.
இந்தியா முழுவதும் கடந்த 20 முதல் 26ம் தேதி வரையிலான ஒரு வார காலத்துக்கு வர்த்தகம் மற்றும் வணிக வாரமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய நாடு சுதந்திரம் அடைந்ததன் 75வது ஆண்டுவிழாவைக் கொண்டாடும் வகையில் இதனை அறிவித்துள்ளார்கள்.


இன்றைய தினம் 2,120.54 கோடி ரூபாய் மதிப்பிலான 24 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலமாக 41 ஆயிரத்து 695 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க இருக்கிறது. இந்த முதலீடுகள், சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, மதுரை, தஞ்சாவூர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி என்று தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சிக்கு ஏதுவாக, பல்வேறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தருணத்தில் முதலீடு மேற்கொண்ட அனைவருக்கும் எனது நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


நம்முடைய தயாரிப்புகள் அனைத்தும் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும். உலகின் முன்னணித் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தங்கள் நிறுவனத்தை தொடங்கிட வேண்டும். அதாவது உலகம் முழுக்க நாம் செல்ல வேண்டும். உலகம், தமிழகத்தை நோக்கி வந்தாக வேண்டும். மொத்தத்தில் தமிழகத் தொழில்துறையின் உள்ளங்கையில் உலகம் இருக்க வேண்டும். அதுவே உங்களது இலக்காக அமைந்திட வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

 

Tags :

Share via