ஞாயிற்றுக்கிழமை 3 வது மாபெரும்  கொரோனா தடுப்பூசி முகாம்  அமைச்சர் மா.சுப்பிரமணியன்

by Editor / 23-09-2021 03:53:09pm
 ஞாயிற்றுக்கிழமை 3 வது மாபெரும்  கொரோனா தடுப்பூசி முகாம்  அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 


தமிழ்நாட்டில் வரும் ஞாயிற்றுக்கிழமை 3 வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவத்தார்.


சென்னையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
தமிழ்நாட்டில் கடந்த 12 ந் தேதி நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் மூலம் 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கும் கடந்த 19 ந் தேதி நடைபெற்ற 2 வது மாபெரும் தடுப்பூசி முகாம்கள் மூலம் 16 லட்சத்து 43 ஆயிரம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அந்த நாட்களில் பொதுமக்கள் சாரை சாரையாக வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதனால் அந்த நாட்கள் தடுப்பூசி திருவிழா போல இருந்தது. இதனால் நாம் நிர்ணயித்த இலக்கை விட அதிகமான அளவில் பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.


கடந்த 2 நாட்களாக தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசின் தொகுப்பில் இருந்து கொரோனா தடுப்பூசிகள் வரவில்லை. தற்போது 5 லட்சம் தடுப்பூசிகள் கையிறுப்பில் உள்ள நிலையில் இன்று மாலை 14 லட்சம் தடுப்பூசிகள் வர இருக்கிறது.
இந்நியலையில் தமிழ்நாடு முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை (26ந் தேதி) அன்று மீண்டும் 3 வது மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன. அன்றைய தினத்தில் 20 ஆயிரம் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு அவற்றின் மூலம் 15 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் மூலம் கிராமங்கள் மற்றும் மலைக்கிராமங்கள் என அங்கு உள்ள நோயாளிகளைக் கண்டறிந்து அவர்களின் வீடு தேடிச் சென்று மருந்து, மாத்திரை, சிகிச்சைகளை செவிலியர்கள் வழங்கி வருகின்றனர். இந்தப் பணிகளில் தொய்வு ஏற்படவில்லை. இதுவரை 9 லட்சத்து 47 ஆயிரத்து 284 பேர் பயன் பெற்றுள்ளனர்.


இந்நிலையில் தமிழ்நாடு முழுதிலும் உள்ள அரசு மாவட்ட மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வரும் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு உயர் ரத்த அழுத்த நோய் மற்றும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நீரிழிவு நோய் ஆகியவற்றைப் பரிசோதனை செய்யும் மையங்களை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். மிக விரைவில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 1 கோடி பேர் பயன் பெறுவர்.


இந்த வாரம் தேசிய காது கேளாதோர் வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் காது கேளாதோருக்கு காது கேட்கும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, திருச்சி அரசு பொது மருத்துவமனை, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளுக்கு ரூ.75 லட்சம் மதிப்பிலான காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றிற்கான உபகரணங்களை முதலமைச்சர் வழங்க உள்ளார்.


கடந்த ஆண்டு 26 ஆயிரம் பேருக்கு டெங்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், 2 ஆயிரத்து 410 பேர் அதனால் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு 76 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 2 ஆயிரத்து 733 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் டெங்கு நோய் ஏற்படக் காரணமாக இருக்கும் கொசுக்களை ஒழிப்பதற்கும் கொசுக்களைத் தடுப்பதற்கும் அனைத்து உள்ளாட்சி நிர்வாகங்களோடு சேர்ந்து மாநில சுகாதாரத்துறை தொடர்நது நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

 

Tags :

Share via