ஐ.ஜி.முருகன் பாலியல் வழக்கு:  உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

by Editor / 27-09-2021 04:34:10pm
 ஐ.ஜி.முருகன் பாலியல் வழக்கு:  உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு



தமிழக காவல்துறையின் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக இருந்த ஐ.ஜி.முருகன் மீது, பெண் எஸ்பி ஒருவர் கடந்த 2018ஆம் ஆண்டில் பாலியல் புகார் அளித்திருந்தார். அதில், தினமும் ஆபாச வீடியோக்களை அனுப்பி தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறும் வற்புறுத்தியதாகவும், தன்னைக் கட்டிப் பிடிக்க முயற்சிப்பதாகவும், பல வழிகளில் தொடர்ந்து பாலியல் அழைப்பு விடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இதனைத் தொடர்ந்து காவல்துறை தலைவர் உத்தரவின் பேரில் தமிழக காவல்துறையில் செயலற்று கிடந்த விஷாகா குழு மீண்டும் புதுப்பிக்கப்பட்டு இந்த புகார் குறித்து விசாரிக்கப்பட்டது. அக்குழு இந்த விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்குப் பரிந்துரை செய்தது. ஆனால், சிபிசிஐடி விசாரணையில் திருப்தி இல்லை என்ற பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.ய்ன் முறையீட்டை தொடர்ந்து, பாலியல் புகார் வழக்கு விசாரணை தெலங்கானா மாநிலத்துக்கு மாற்றப்பட்டு, அம்மாநில டிஜிபி மேற்பார்வையில், பாலியல் புகார் மீதான விசாரணையை 6 மாதத்துக்குள் விசாரித்து முடித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


இதனை எதிர்த்து ஐ.ஜி.முருகன், தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தெலங்கானா மாநிலத்துக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.


இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி சுபாஷ் ரெட்டி தலைமையிலான அமர்வு முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே,
 தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் புகார் வழக்கு விவகாரத்தை தமிழகத்திலேயே விசாரிக்கலாம். தமிழ்நாட்டில் இந்த வழக்கு விசாரிக்கப்படும்போது தனக்கு நியாயம் கிடைக்கும் என நம்புவதாக புகார் அளித்த பெண் எஸ்.பி. பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருப்பதாக சுட்டிக்காட்டினார்.


மேலும், இந்த விவகாரத்தில் மனுதாரர்களின் கோரிக்கையான தமிழகத்திலேயே விசாரணை நடத்த வேண்டும் என்பதற்கு எவ்வித எதிர்ப்பும் இல்லாததால் மனுக்கள் அத்தனையையும் முடித்து வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து அவர் வாதிட்டார். இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து மனுக்களையும் இன்றைய தினத்துக்கு பட்டியலிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்திருந்தனர்.இந்த வழக்கு மீண்டும்விசாரணைக்கு வந்த போது ஐஜி முருகன் மீதான பாலியல் புகார் வழக்கை தெலங்கானாவுக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை தமிழகத்திலேயே விசாரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via