சேலம் அருகே சோகம் ஒரே நேரத்தில் மயங்கி விழுந்து இறந்த 3 மாடுகள்
காலாவதியான சாக்லேட்டுகளை தின்று 3 மாடுகளும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள கோம்பூரான்காடு பகுதியில் பெரமன்-ஜெயம்மா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் பெரமன் விவசாயியாக இருக்கின்றார். இந்த தம்பதியினர் 4 பசு மாடுகளை வீட்டில் வளர்த்து வந்தனர். இதனால் தினசரி மாடுகளை மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடுவது வழக்கமாக இருக்கிறது. அதன்படி மாடுகளை அவர்கள் மேய்ச்சலுக்கு அவிழ்த்து விட்டதும் அது அதே பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகில் மேய்ந்து கொண்டிருந்தது.
அப்போது அங்கு திடீரென்று 4 மாடுகளும் மயங்கி விழுந்தது. அதில் 3 மாடுகள் சிறிது நேரத்தில் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்து விட்டது. மேலும் 1 மாடானது உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
இதுகுறித்து தகவலறிந்த தம்பதியினர் அங்கு விரைந்து சென்று இறந்து கிடந்த மாடுகளை பார்த்து கதறி அழுதனர். இதனையடுத்து மாடுகள் இறந்து கிடந்த இடத்தில் காலாவதியான சாக்லெட்டுகள் மற்றும் திண்பண்டங்கள் அதிக அளவில் கிடந்தது. இதனால் மாடுகள் அவற்றைத் தின்று இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதன்பின் மயங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒரு மாட்டை அவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு மாட்டுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதனைதொடர்ந்து இறந்த மற்ற மாடுகளும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ஜெயம்மா கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :