கிராம சபைக் கூட்டத்துக்கு பாப்பாபட்டியை தேர்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இன்று வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாப்பாபட்டி ஊராட்சியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வது அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது
அதற்கு காரணம் பாப்பாபட்டியில் கடந்த காலங்களில் நிகழ்ந்த கசப்பான நிகழ்வுகளே என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.திமுக கடந்த 2006- ல் ஆட்சிக்கு வந்தபோது, உள்ளாட்சித் தேர்தலை அறிவித்தது. அப்போது பல உள்ளாட்சி அமைப்புகள் சுழற்சி முறையில் பட்டியல் சமூக மக்கள் போட்டியிடும் வகையில் அறிவிக்கப்பட்டது.அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தமிழகத்தில் உள்ள சில ஊராட்சிகளில் பிரச்னை ஏற்பட்டது. அதில் முக்கியமாக மதுரை மாவட்டத்தில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் , விருதுநகர் மாவட்டத்தில் கொட்டக்காஞ்சியேந்தல் ஊராட்சிகள் ஆகும்.அரசு தரப்பில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று வரும் பட்டியல் சமூகத் தலைவர்களை ராஜினாமா செய்து வைத்து உள்ளாட்சித் தேர்தலை கேலிக்கூத்தாக்கி வந்தார்கள். இதனால் இப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது.
இதை இப்படியே தொடர விடக்கூடாது என்று முடிவு செய்த அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின், அப்போது மதுரை கலெக்டராக இருந்த உதயச்சந்திரன் மூலம் சம்பந்தப்பட்ட ஊர்காரர்களிடம் கடுமையாக பேசி தேர்தலை நடத்தினார்.
தங்கள் ஊரில் பட்டியல் இன ஊராட்சித் தலைவரை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று பாப்பாபட்டி ஊராட்சியிலுள்ள குறிப்பிட்ட சிலர் முரண்டு பிடித்தாலும், தேர்தல் நடத்தி பட்டியல் சமூக ஊராட்சித்தலைவர் பொறுப்புக்கு வந்தார்.
அவருக்கு அரசு தரப்பில் காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அது முதல் தொடர்ந்து பட்டியல் சமூகப்பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். ஊர் மக்கள் மத்தியிலும் மன மாற்றம் ஏற்பட்டு சமூக மாற்றத்தை எற்றுக்கொண்டார்கள்.இது சாதாரண விஷயமல்ல, சட்டத்தின் மூலம் சமூகத்தில் மாறுதலை கொண்டு வந்தாலும், மக்கள் மனம் மாற்றமில்லாமல் அது சாத்தியமாகாது.
தற்போது மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்புக்கு வந்த நிலையில் தான் கலந்துகொள்ளும் முதல் கிராம சபை கூட்டம் முக்கியமான ஊராட்சியாக இருக்க வேண்டுமென முடிவு செய்து வருகிறார்.
Tags :